29.12.11

இயல்பு


சுற்றத்தில் நீ..
மிதமான வெயிலும்
இதமான குளிரும்
கலந்தே அடிக்கின்றன!

உன் கடைவிழிப்
பார்வை ஒன்றில்
மெலிதாய் ஒரு புயலும்
வேகமாய் ஒரு தென்றலும்
வீசிச் செல்கின்றன!

நீ கடந்து போகும்போது
ஆரிக்கல்களும்
வென்ட்ரிகல்களும்
பதட்டமடைகின்றன!

இயல்பாய் இருப்பதில்லை
எதுவும்,
உன்னைத்தவிர
இந்த சூழலில்!

28.12.11

மாற்றம்

முல்லையோடும் முன்றில்,
இன்று குரோட்டன்ஸுடன் பால்கனி!

29.11.11

புதிர்


அச்சிலிருந்த முக்கோணங்கள் எல்லாம்
எழுந்து பெருத்து தூரத்து மலைகளாய் மாற,
கோடுகள் அனைத்தும் நீலமாயும் நீளமாயும்
வளைந்து நெளிந்து கடல்நீராக,
வட்டங்கள் அனைத்தும் எழுந்து
உருண்டு திரண்டு பாறைகளாய்க் கரைகட்ட,
முற்றுப்புள்ளிகள் தூறலாய்த் தூறி,
எழுத்துக்கள் எண்ணிலடங்காத விண்மீன்களாயும்
மீதமுள்ள வெற்றுத்தாள் நீண்டு வான்வெளியாயும் போக
உருவான ஒரு ரம்யமான சூழலை
விட்டு வர மனமில்லை என்றாலும்,
உடைத்தெறிந்து மீண்டுமனைத்தையும்
கிடத்தி தாளில் பதிக்கிறேன்!
மீண்டிருக்கிறது என் வினாத்தாள்!!!
செலுத்துகிறேன் சிந்தையையும் செயலையும்
விடைத்தாள் மேல்!
முடித்துப் பார்த்தால் விடைத்தாள்
மட்டும் அதிர்வெடிக்கு முந்தைய அண்டமாய்!

14.11.11

உன்னைக் காணும் தருணங்கள்

உன்னைக் காணும் தருணங்களில் 
தவிர்க்கவே முடிவதில்லை..
விழி ஓரம் ஒரு பார்வை,
இதழோரம் ஒரு புன்னகை,
மனதோரம் ஒரு கவிதை!!!

5.11.11

உன்னைக்கண்ட நாளில்

உன்னைக்கண்ட நாளில் தூக்கத்தை நான் மறந்தேன்!
தூக்கம் மறந்த போதும் கனவுகள் பல் கொண்டேன்!
எல்லாக் கனவுகளிலும் உன்னைத் தானே கண்டேன்!
உன் கனவுப் பார்வைகளாலும் என்னை மறந்தே பறந்தேன்!!! 

அன்றைய உந்தன் சட்டை நிறம்,
பக்கத்தில் நின்ற பச்சை மரம்,
எல்லாம் எண்டன் நினைவில் வரும்
அந்த நொடியில் என் நிலை மட்டும் நினைவில் இல்லவே இல்லையே!

உன் கவிதைகளால் என் கனவுகளைக்
களவாடிடுவாய் என்றிருந்தேன்!
கவிஞனாய் இல்லாவிட்டால் என்ன?
என் கவிதையாய் இருக்கிறாய் நீயே!

பேருந்தில் உன்னோடு ஒரு நெரிசல் பயணம்,
பைக்கின் பின்சீட்டில் ஓர் உரசல் பயணம்,
அழகாய் இனிதாய் அமைந்தது போல
வேண்டும் எனக்கொரு வாழ்க்கைப்பயணம்!

16.10.11

மீண்டும் ஒரு முறை


மீண்டும் ஒரு முறை
வேண்டும் எனக்கேட்கிறது
உயிர், அந்த சிலிர்ப்பை..
உடல், அந்த பறத்தலை..
மனம், அந்த புல்லரிப்பை..
நீ கேட்ட அந்த நொடி
“என்னோடு வருவாயா
வாழ்வு முழவதும்?”
பயத்தோடு தினம் கேட்கும் கேள்வியாகிவிட்டது
இப்போதெல்லாம், வழக்கமாய்ப் போய்விட்ட
வாக்குவாதங்களுக்கிடையே..
“பேச்சை மாற்றித் தப்பிக்கப் பார்க்காதே!”
என்ற பதிலும் வாடிக்கையாகிவிட்டது!
“அழகாய் இருக்கிறாய்!” என்று
நீ ரசித்த தருணங்கள்தான்
என் முகப்புத்தக முகப்பைப் பிடித்தன அன்று..
முகப்புத்தகப் படங்களில் பார்த்து கூட உனக்கு
ரசிக்கத் தோன்றுவதில்லை இப்போதெல்லாம்!
வாய் கொள்ள முடியாத அந்த சிரிப்பு,
மனம் கொள்ள முடியாத அந்த களிப்பு,
சொல் கொள்ள முடியாத அந்த தவிப்பு,
எல்லாம் மீண்டும் வேண்டும்
ஒரு முறையல்ல..
வாழ்வு முழுவதிற்கும்!!!
நன்றி: திண்ணை

6.10.11

சிற்பம்


‘பாவம் காகம், பசிக்குமென்று
ஒரு வடை கொடுத்தாள் பாட்டி..’
என்று தொடங்கிற்று உன் காக்கா கதை!

பார்த்துப் பிடிக்கவில்லை,
பழகிப்பார்த்துப் பிடித்தது,
சின்ட்ரெல்லாவை உன் இளவரசனுக்கு!

‘ரெயின் ரெயின் கம் அவர் வே’ என்றும்
‘நிலா நிலா பறந்து வரேன்’ என்றும்
பாடப்பட்டன உன் நர்சரி ரைம்ஸ்!

இவை மட்டுமல்ல
அழகாய் உன் தனித்துவத்தோடு
செதுக்கப்படுகிறது குழந்தையும் தான்!

nandri : thinnai

26.9.11

கடைசி இரவு


எதிர்பார்த்துக் காத்திருந்து
படிக்கும் ஒரு தொடர்கதையின்
கனத்த கடைசி அத்தியாயமாய்,
நீண்டு கொண்டே இருந்த
என் நாட்குறிப்பிற்கு
“முற்றும்” போட்டு விட்டேன்..
நாளை, அடுத்த வாரம் என்று
கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம்
தேர்தல் அறிக்கைகளாகப் போகின்றன..
ஏளனமும் அலட்சியமும்
வந்த இடங்களிலிருந்து
மாலைகளும் மலர்வளையங்களும் வரலாம்,
சில பல துளிக்கண்ணீரும்!
பார்த்து ஏமாற இருக்கப்போவதில்லை..
எதெதற்கோ பயந்த பயங்களெல்லாம்
வேடிக்கையாய்த் தோன்றுகின்றன..
கனவுகளும் அவற்றை நோக்கிய
பயணங்களும், தடைகளும்
அது குறித்த போராட்டங்களும்
அர்த்தமற்றுப் போன வெளி இது!
நாளைய விடியலில் மீதமிருக்கும்
என் மிச்சங்கள் மட்டும்
இந்த அறையில்!
பயமல்லாத அதுபோன்ற
எதுவோ ஒன்று ஆக்கிரமிக்கிறது,
எண்ணங்கள் எல்லாம் ஆழ்மனத்தின்
அடியில் அமிழ்ந்துபோய்
அமைதியற்ற ஒரு நிசப்தம்
ஆட்கொண்டிருக்கும் என்னை!

நன்றி : திண்ணை

19.9.11

பேசித்தீர்த்தல்

சவ்வூடு பரவலின்
விதிப்படி பரவுகிறது
கோபமும் வெறுப்பும்,
அடர்ந்திருக்கும் இடத்திலிருந்து
குறைந்திருக்கும் இடத்திற்கு,
விழிக்குப் புலப்படா ஒரு
படலத்தில் ஊடுருவி..
விதிமீறி கிழிகிறது
அப்படலம் சில பரிமாற்றங்களில்..
பேசித்தீர்த்துக்கொள்ள எண்ணி
முன்னேறுகிறேன்..
மனம்மாறி தீர்த்துப்பேசிடத்
தோன்றுகிறது!
ஒன்றுமில்லை இன்னும்,
தீர்ப்பதற்கு, தீர்ந்துபோய்விட்டது
எல்லாம்..
இல்லை! தீர்ந்துபோவதற்கு
ஒன்றுமே இருந்திருக்கவில்லையோ
என்று கூடத்தோன்றுகிறது!!nandri: thinnai

5.9.11

அந்த ஒரு விநாடி

அந்த ஒரு விநாடியைத்தான்
தேடுகிறேன்..
உன் நாட்குறிப்பிலும்
என் நாட்குறிப்பிலும்,
நம் எழுதுகோல்கள் அழுதிருக்கவில்லை
என் விழிகளைப் போல்..

ஏதோ ஒரு கடிகாரம் அந்த
நொடியோடு நின்றிருக்கும்
என்றெண்ணி கண்பதிக்கிறேன்,
எந்த கடிகாரமும்
துடிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை,
என் இதயத்தைப்போல்..

சிவந்த கண்களோடும்
கனத்த இதயத்தோடும் தேடுகிறேன்,
பரஸ்பர நம்பிக்கையும் அன்பாலான
நம் நட்பில் சந்தேக விஷத்துளி
வீழ்ந்த அந்த நொடியை,
நம் வாழ்வுகளிலிருந்து நிரந்தரமாக
அழிக்க எண்ணி… நன்றி : திண்ணை

22.8.11

பொன்மாலைப்பொழுதிலான பேருந்துப்பயணம்


ஒரு பொன்மாலைப்பொழுதிலான
பேருந்துப்பயணம்,தோழியுடன்..
வெட்டிக்கதைகளுக்கிடையே அலறிய
அவளது அலைபேசியில் பிரத்யேக அழைப்பொலியும்
முகமொளிர்ந்து வழிந்த அவள் அசட்டுச்சிரிப்பும்
சொல்லாமல் சொல்லின எதிர்முனையில் யாரென்று!
இங்கிதம் தெரிந்தும்
எங்கும் நகர முடியாத தவிப்பு..
மூடிகளில்லா காதுகளைப்படைத்த
இயற்கையை நொந்தபடி
கைகள் துழாவுகின்றன என் ஜீன்ஸின் பாக்கெட்டை..
கிடைத்துவிட்டது செயற்கை மூடி..
என் இயர்போன்ஸ் காப்பற்றிவிட்டது,
‘ம் இப்போ வேணாம்.. அப்புறமா…’
-களிலிருந்து அவளையும்
‘சிவபூஜைக்குள் கரடி’ என்றும் இன்னும்
பலவாறும் திட்டப்படுவதிலிருந்து என்னையும்!!நன்றி : திண்ணை

1.8.11

மகிழ்ச்சி


வெளியுலக வெறுப்பை வீட்டில்
கொட்டும் சிடுசிடு அப்பா..

கடுகு பொரிவதைப்போல்
தானும் பொரியும் அம்மா..

கவன ஈர்ப்பு போராட்டமாய்
அழுது தீர்க்கும் குழந்தை..

வீட்டில் மகிழ்ச்சி நிலவ
நிறுவப்பட்ட புத்தர் சிலை
மட்டும் வாசலைப் பார்த்து
சிரித்தபடி வீற்றிருக்கிறது...

28.7.11

காதலும் கவிதையும்


என் கவிதைகளில் பலர் காதலிக்கிறார்கள்..
என் கவிதைகளை நீ உட்பட
பலரும் காதலிக்கிறார்கள்...
என் கவிதைகளைப் படித்த பலர்
என் காதலைக் காதலிக்கிறார்கள்..
என் கவிதைகளும் உன்னையும்
காதலையுமாய்க் காதலிக்கின்றன..
என் காதல் மட்டும் என் கவிதைகளைக்
காதலிப்பதே இல்லை..
உன்னைக் காதலிப்பதில்
தன்னை என் கவிதைகள் மிஞ்சிவிடுமோ
என்ற பயத்தில்...

24.7.11

தண்டனை

எப்போதும் உன்னைச் சுற்றியே
அமைப்பதற்காய் கோபித்துக்கொண்டன
என் எழுத்துக்கள்...
அதை மதித்து
வேறு ஏதேதோ எழுத
நான் முயற்சிக்க,
எந்த பாடுபொருளும்
உன்னை நெருங்கக்கூட
முடியாமல் இருக்க,
தன் தவறை உணர்ந்து
குற்ற உணர்வோடு
என் பேனா
முள்ளிலேயே
வாழ்நாள் சிறை என்று
சுய தண்டனை அளித்துக்கொண்டன
என் எழுத்துக்கள்..
வேலையில்லாமல் என்
கணினியின் மொழிமாற்றி..

23.7.11

ஊடல்

எதேச்சையாய் ஏதோ தோன்றி
தன்னிச்சையாய் பேனா நகர,
ஜாவா, லினக்ஸ் ஏடுகள் எல்லாம்
தமிழ்க்கிறுக்கல்களால் நிறைந்த
நேரங்கள் கடந்தே விட்டன!!!
எழுத நினைத்து வெற்றுத்தாள்
எடுக்கிறேன், ஊடல் கொண்டு
தலை குனிய மறுக்கிறது என் பேனா!!!

12.7.11

கருப்பு வெள்ளை


வெள்ளை வெளியில்
பொதிந்து கிடக்கும் என் கருவிழியில்
கருப்பு பிம்பமாய் நீ..
படர்ந்து ஆக்கிரமிக்கிறன்றன மனதை
கருப்பும் வெள்ளையும்..

என் கருப்பு இருட்டுக்குள்
வானவில் முளைக்கச் செய்த
வெள்ளை ஒளி நீ..
அறிவியல் கூறாத ஒளிப்பிரிதல்..

மனதின் அனைத்து நிறங்களும்
வெளிக்காட்டும் வெள்ளை நான்..
அனைத்தையும் உள்வாங்கி எதையும்
பிரதிபலிக்காத கருப்பு நீ..

வெள்ளை காகிதம் நான்..
என் மீதான கருப்புப் புள்ளி நீ..
என்னைப் பார்ப்போரெல்லாம்
உன்னைத் தான் காண்கிறார் என்னில்..
வெள்ளை மனம்கொண்ட என்
காரிருள் ஆசைகளுக்கு
வெள்ளைக்கொடி அசைப்பாயா???

2.7.11

பிறப்பிடம்வெள்ளையர் வேட்டி சேலையிலும்
நம்மவர் ஜீன்சிலுமாய்
நீறு மணமும்
மக்களின் வேண்டுதல்களும்
கமழும் நம் ஊர் கோவில்..

ஊர்களின் பெயர்களும்
விற்கப்படும் பொருட்களும்
ஒலித்துக்கொண்டிருக்கும்
முகம் தெரியா மக்கள்
நிறை பேருந்து நிறுத்தம்..

அதிகபட்ச அலங்கோலத்தில்
வீசப்பட்ட புத்தகங்கள்,
துவைத்த துவைக்காத
துணிகளின் அணிவகுப்பு
கொண்ட விடுதி அறை..

என்று எங்கும்
பிறப்பெடுக்கின்றன என் கவிதைகள்..
என் கண்கள் நோக்கும் உன் கண்கள்
பார்க்கும் போது மட்டும்
மௌனமே தவழ்கிறது சுற்றிலும்..
பேச முடிந்த கவிதை அத்தனையும்
உன் கண்களே பேசிவிடுவதால்..

24.5.11

நில்லாத ஓட்டம்


நான் சிந்திக்கத் தொடங்கிய
ஒரு நாளில் நீ பேசத் தொடங்கினாய்!
என் மூளையையும் இதயத்தையும்
மாற்றி மாற்றி படமெடுக்கும்
கதிரியக்கமானாய்!
என் மனமுறைவதைச் சரியாய்ச்
சொல்கிறாய் என்று வியந்திருக்கிறேன் பலநாள்..
நான் சிந்த முடியாது
பகட்டுப் புன்னகையால் மறைத்த
கண்ணீரையும் கோபத்தையும் சிந்தியது நீ!
வரும் நாட்களில் என் துணைவனுக்கும்
வரக்கூடும் பொறாமை
நம் நெருக்கம் கண்டு..
வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்
என் சிந்தனை மரிக்கும் வரை
நில்லாத உன் ஓட்டம்..
என் அன்புக்குரிய எழுதுகோலே!

22.5.11

தூசி தட்டுதல்உலக உருண்டையின்
ஏதோ ஒரு பகுதியில்
நடக்கும் அழகிப்போட்டி..
மட்டைப்பந்து போட்டியில்
நெட்டை வீரர் ஒருவரின்
ரெட்டை சதம்..
அரைகுறை ஆடை நடிகையின்
ரகசியதிருமணமும் தொடரும்
விவாகரத்தும்..
தெற்கில் எங்கோ ஒரு
வாய்க்கால் தகராறில்
நிகழ்ந்த குரூரக் கொலை..
நம்ப வைக்க முயற்சிக்கும்
தேர்தல் அறிக்கைகளும்
அது குறித்த
ஆட்சி மாற்றங்களும்..
எத்தனை முறை
வாய் பிளந்து பார்த்தாலும்
திருந்தாத மக்களும்
பயன்படுத்திக்கொள்ளும்
உண்மை மகான்களும்..

என எதுவும்
கிடைக்காத அன்று
மீண்டும் தூசி தட்டப்படுவார்
அன்னா ஹசாரேவும் அவரது கொள்கைகளும்..  

15.5.11

தட்டுப்பாடு


உடன் வரும்
வழக்கமாய் வர்ணிக்கப்பட்டு
அன்று கவனிக்காமல் விடப்பட்ட
வெண்ணிலா..
கடந்து செல்லும்
தீப்பெட்டி அடுக்கினாற்போன்ற
கட்டிடங்கள்..
தன் குறிக்கோள் மறந்து
தெரு நாய்களுக்கு அடைக்கலம்
தந்திருந்த குப்பை சூழ் குப்பைத்தொட்டிகள்..
குச்சி மட்டைகளும்
நெகிழி பந்துகளாலும்
ஆன மட்டைப்பந்து போட்டிகள்..
சிறுநகர வீதி..

ஏதோ சொல்ல நினைத்து
உன் கை சீண்டும் என் துப்பட்டா..
என் நாசி தீண்டும்
ஏதேதோ செய்யும் என
விளம்பரப்படுத்தப்படும்
உன் வாசனை திரவியம்..

காற்றும் எதுவும் புக முடியும்
இடைவெளியில் நாம்..
சொல் தட்டுப்பாடு,
என் மனதில் நிகழும்
வேதிவினை போன்றவற்றை விவரிக்க மட்டும்.. 

14.5.11

என் பேனாவின் மௌனம்


மூளை அறிந்தும் இதயம்
ஏற்க மறுக்கும் சில விஷயங்களுள்
ஒன்று..
கல்லூரி வாழ்வின் 1461 நாட்கள்
முடிந்து போனதாய்
ஏற்க முடியாதிருக்கும் உங்களுக்கு நான்,

கல்லூரிக்குள் நுழைகையில்
நினைத்ததும் இல்லை...
இரண்டு வருடமாய் இங்கு
எனக்கு உடன்பிறப்புகள் இருப்பார்கள் என்று!
வாழ்க்கைப் பாடம் கற்பிக்க!

சேர்ந்து செலவிட்டது
சில நேரங்கள் தாம்!
பல நாள் சேர்ந்து சிரித்திட மனங்களும்
சில நாள் பிடித்து அழுதிட கரங்களும்
உங்களிடம் கண்டேன்!

என்றும் தொடர்பில் இருப்போம்
எனும் வாக்குறுதிகளின்
வாழ்நாள் அறிந்தவள் நான்..
எதேச்சையாய் எப்போதாவது
என் நினைவு வந்தால் நீங்கள்
சிந்தப் போகும் ஒரு சிறு புன்னகை போதும்!

உங்களைப் பிரிகையில்
உங்களுக்கென ஏதோ கிறுக்க நினைக்கிறேன்
தொண்டை அடைத்து மனம் கனத்து
என் பேனாவும் காக்கிறது மௌனம்!!


22.4.11

கலியுக அகலிகைகள்புழுவாய்க் கூட்டிலடைந்து
கிடந்து பல்லாயிரம்
போராட்டம் நடத்திப்பின்
வெளிவந்தோம்!
ஆரம்பத்தில் கல்லடி, மரத்துப்போனது!
பலநூறாண்டாய்த் தொடர்கிறது சொல்லடி..
ரணங்கள் ஆறுவதே இல்லை..

இன்று நம் சமூகத்தில்
அந்தப்புரம் பல கொண்டவனெல்லாம்
உத்தமன் என்ற போர்வைக்குள்..
தனிமையில் வாழ்வாளாயின்
கண்ணகிக்கும் கிடைக்கும்
“கேடுகேட்டவள்” பட்டம்!
பாரதி!! இப்பட்டம் ஆளவா பாரினில் பெண்கள்??

வெற்றியில் மாலைகள் சூடவேண்டிய
தோள்களுக்கு அநேக நேரங்களில்
புதுச் சிலுவைகள்!

சாதிக்கும் சாதியின்மேல்
சகதியடிப்பது புதிதல்ல..
அடிக்கப்பட்டது , எங்கள்
வளர்ப்பின் மேல்,
படிப்பின் மேல்,
கலையின் மேல்,
நம்பகத்தின் மேல்..
தண்ணீர்பட்ட தாமரை இலையாய் இருந்தோம்!

தொடர்கிறது, எங்கள்
நடத்தையின் மேல்,
கொண்ட காதலின் மேல்,
கற்பின் மேல்..
மனபாரத்தால் மூழ்கடிக்கப்படுகிறோம்!

எங்களையும்
எங்கள் மனதையும் கல்லாக்கிக்கொண்டு
வாழும் ‘கலியுக அகலிகைகள்’ !!!

18.4.11

பின்தொடர்கிறேன்..


உன் வலைப்பூவின் பின்தொடர்வோர்
பட்டியலில் புதியதாய் ஒருவர்..
சொடுக்கிப் பார்க்கிறாய்..
அடையாளம் தெரியாமல்
அப்படியே விட்டுச் செல்கிறாய்..
தினந்தினம் படிக்கிறேன்,
உன் அனுபவங்கள் மலர்கின்றன
வலைச்சரத்தின் பூக்களாய்,
என் நினைவுகளும் மலர்கின்றன...
உணவு மேசையில் உணவூட்டிக்
கொண்டே உன் விழிவிரிந்த
முகபாவங்களோடு தினந்தினம்
கேட்ட உன் தினக்கதைகளை
மறக்க முடியாமல் உன் அம்மா...

நன்றி: திண்ணை..

13.4.11

அன்புடன் விழுது

அன்பு
பாசம்
நேசம்
காதல்
பகிர்வு
நம்பிக்கை
இச்சொற்களுக்கெல்லாம்
அர்த்தம் கற்றுத்தரும் வேலை
இருந்ததில்லை உங்களுக்கு..
உங்கள் உறவு கற்றுத்தந்தது நேரடியாய்..

22 ஆண்டுகளும்
தினந்தினம் புதியதாய்த்
துளிர்த்தது போல் உங்கள் அன்பு..
கற்றுத் தரும் இந்த தலைமுறைக்கு
காதலின் மகத்துவம்...

அதனால் தானோ புத்தாண்டில் மணம் செய்துகொண்டீர்?

வாழ்வு தரட்டும் புதுப்புது வழிகள்
உங்கள் நேசம் பெருக..


வேர்களை திருமண நாளுக்காக வாழ்த்தும் விழுது...

8.4.11

காலங்கள் நீ


காலங்கள் நீ
உன் சுவாசமும் சொற்களும்
எனைத்தீண்டி நரம்புகளினூடே
பாய்ந்து சிலநேரம்
சிலிர்க்கச் செய்கையில் கார்காலம்..!

அன்பின் மிகுதி தொட்டு
ஆரவாரக் கூச்சல் விட்டு
அமைதியாய் உயிரின் விளிம்பு தொடும்
அணைப்பில் நீ குளிர்காலம்..!

இமையாய் விழியெனைக் காத்து,
இறுக என் கரம்பற்றி,
நம் அடித்தடம் நாலன்றி இரண்டாய்த்
தெரிகையில் நீ இளவேனில்..!

சிறு சிறு சேட்டை செய்து
சிலநாள் சினேகமாய் உன்னைச்
சீண்டி நான் சிரிக்கையில்,
செல்லக் கோபத்தோடு நீ முதுவேனில்..!

உனக்குப் பொருத்தமாய் நானும்
எனக்குப் ஏற்றதாய் நீயும்
தேடியெடுத்த ஆடை உடுத்தி
இணையாய்ப் பெருமிதத்தோடு நடக்கையில் முன்பனி..!

நாளின் ஓட்டம் ஓய்ந்து
ஆடிய ஆட்டத்தின் அசதி தேய
உன் மீது முகம் புதைத்து கண்ணையர்கையில்
ஆறுதலாய் தட்டிக்கொடுக்கும் நீ பின்பனி..!

என் ஆண்டின் ஆறு காலமும் நீ!
என் வாழ்வின் முக்காலமும் நீ!

4.4.11

சுயம்அழுந்தத் தாழிடுகிறேன் கதவை
வெளித்தொடர்பு முழுதாய்த் துண்டித்து..

கழற்றி மாட்டுகிறேன்
துப்பட்டாவோடு என் சுமைகளையும்..

காலணி அவிழ்க்கும் போது
என் கவலைகளையும் சேர்த்து..

முகம் கழுவும்போது என்
முகமூடிகளையும் அடியோடு..

பயம், பகடு, பாசாங்கு
பொறாமை, பெருமை எனுமனைத்தும் நீங்கி

விளக்கை அணைக்கையில்
இருள் படர்கிறது என் சுயம் மீட்கப்பட்டு...
நன்றி 
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311041021&format=html

1.4.11

நீ..


நீ நடந்த அடித்தடம் அழியவில்லை
என் வீட்டு முற்றத்தில்..
நீ புழங்கிய மணம் மறையவில்லை
என் சுற்றத்தில்..
நீ பேசிய சொற்கள் எதிரொலிக்கின்றன
அலைபேசியின் அழைப்பொலியாய்..
நீ கொஞ்சியதால் நிரம்பி வழிகிறது
என் மின்னஞ்சல் உள்பெட்டி..
நீ சிரித்த சில தருணம் தாங்கியபடி
என் மடிக்கணினியின் முகப்பு..
நீ கிறுக்கிய கிறுக்கல்களைப் பிரதிபலிக்கும்
என் அறையின் உட்சுவர்..
உரிமை மறுக்க முயற்சிக்கிறாய்
எனக்கு மட்டும்,
உன்னைத் தாங்கிட என்றைக்கும்..

30.3.11

சாளரம் திறக்கையில்..


சாளரம் திறக்கிறாய், முதன்முதலாய்
ஒளியைச் சந்திக்கின்றன என் விழிகள்...

“நிலா நிலா ஓடி வா”வும்
“சின்ட்ரெல்லா”வும்
ரசிக்கிறேன் விழிவிரித்து...
விரிக்கிறாய் விழி நீயும் என்னோடு..

அம்புலிமாமாவும் கோகுலமும்
எழுதுக்கூட்டுகிறேன்...
படிக்கிறாய் பக்கமொன்றைப்
பலமணிநேரம் பக்கத்தில் படுத்தபடி..

குறுந்தகடுகளின் கூட்டம் சேர்த்து
வரிபிழறாமல் ரஹ்மானைப் பழகுகிறேன்
ராகம் தவறாமல்...
ரசனை கூட்டுகிறாய் நீயும்.

என் மருதாணிக் கிறுக்கல்
பழக கை தேடி உன் கரம் கேட்கிறேன்..
உள்ள பணியனைத்தும்விட்டு
கைநீட்டி சிரிக்கிறாய்...

சிட்னி செல்டனுக்கும் சுஜாதாவுக்கும்
மாறி புதிதாய்ப் பல
கற்றதாய் நினைக்கையிலும் தோழி
நீ ரசிக்கிறாய் என்னையும்..

“அம்மாவுக்கு எதுவுமே தெரியாது” மாறி
“அம்மாவுக்கு எல்லாம் தெரியுமென எனக்குத் தெரியாது”
உணர்கிறேன் இன்று,
கேள்வி எழுப்பி வெட்கச் செய்கிறது மனசாட்சி..
“அம்மாவின் உண்மையான ரசனை என்ன?”

விடையில்லா மௌனத்துடன் ரசிக்கத் தொடங்குகிறேன்
“நிலா நிலா ஓடி வா”
நான் ஒரு புது சாளரம் திறந்து..