26.9.11

கடைசி இரவு


எதிர்பார்த்துக் காத்திருந்து
படிக்கும் ஒரு தொடர்கதையின்
கனத்த கடைசி அத்தியாயமாய்,
நீண்டு கொண்டே இருந்த
என் நாட்குறிப்பிற்கு
“முற்றும்” போட்டு விட்டேன்..
நாளை, அடுத்த வாரம் என்று
கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம்
தேர்தல் அறிக்கைகளாகப் போகின்றன..
ஏளனமும் அலட்சியமும்
வந்த இடங்களிலிருந்து
மாலைகளும் மலர்வளையங்களும் வரலாம்,
சில பல துளிக்கண்ணீரும்!
பார்த்து ஏமாற இருக்கப்போவதில்லை..
எதெதற்கோ பயந்த பயங்களெல்லாம்
வேடிக்கையாய்த் தோன்றுகின்றன..
கனவுகளும் அவற்றை நோக்கிய
பயணங்களும், தடைகளும்
அது குறித்த போராட்டங்களும்
அர்த்தமற்றுப் போன வெளி இது!
நாளைய விடியலில் மீதமிருக்கும்
என் மிச்சங்கள் மட்டும்
இந்த அறையில்!
பயமல்லாத அதுபோன்ற
எதுவோ ஒன்று ஆக்கிரமிக்கிறது,
எண்ணங்கள் எல்லாம் ஆழ்மனத்தின்
அடியில் அமிழ்ந்துபோய்
அமைதியற்ற ஒரு நிசப்தம்
ஆட்கொண்டிருக்கும் என்னை!

நன்றி : திண்ணை

3 comments:

Prabu Krishna said...

படித்து முடித்த உடன் நிசப்தம் மனதில்....

கயல்விழி said...

நன்றி சகோ! எழுதி முடித்தவுடனும் அதே நிசப்தம்!

புஷ்பராஜ் said...

இயல்பான வார்த்தைகள் எல்லா எல்லைகளையும் தொட்டுச் செல்கின்றன உங்கள் ஒவ்வொரு கவிதைகளிலும்.

ஒவ்வொரு கவிதைக்குமான இடைவெளியை குறைத்துக்கொண்டு வாரத்திற்கு இரண்டு கவிதைகளாவது எழுத வேண்டுகிறேன்.

Post a Comment