27.1.11

மின்விசிறி

நன்றி உனக்கு..
உன் காற்றால் அவள் கூந்தல்
முகம் மறைத்தது..
இல்லையேல்
சூரிய உதயம் என்றெண்ணி
எழுந்து நாளைத் தொடங்கியிருப்பேன்..

25.1.11

உடைகிறேன்

விழும்போதெல்லாம் உடைகிறேன்..
உன் மூக்குக்கண்ணாடிக்குள்..

குறுஞ்செய்தி(2)

புறாவைத்
தேடியவளின் ஏக்கம்..
கண்ணோடு கண்
நோக்கியவளின் நாணம்..
கடிதங்களில் கண்ணும் இதழும்
புதைத்தவளின் பூரிப்பு..
காணமல் தான் போய்விட்டது..
குறுஞ்செய்தி ஒலியை
தேடும் இக்காலப் பெண்ணிடம்..

குறுஞ்செய்தி

பறந்து போகிறது
என் கோபம்..
திரையில் ஒளிரும் உன்
குறுஞ்செய்திக் கொஞ்சலிலும் கெஞ்சலிலும்.. 

23.1.11

முதிர்கன்னி

கல்யாண ஏலத்தில்
விலைபோகாமல் நான்..
யார் சொன்னது
வைரமும் பிளாட்டினமும்
விலை உயர்ந்ததென்று??
அப்படியென்றால்
"மணமகனை" என்ன சொல்வீர்கள்??

விவாகரத்து

தெரியவில்லை எனக்கு..
நெருப்பைச் சுற்றிய போது
பொசுங்கப் போகிறது நம் உறவென்று..
நீ என் கழுத்தில் கயிறிட்டபோது
அது நம் பந்தத்தின் தூக்குக்கயிறு என்று..

"ஏதோ ஒன்று இருக்கிறது நமக்குள்" என்று
தொடங்கி இன்று ஒன்றுமில்லா வெற்றிடமாய்..
கடைசியாய் ஒரு முறை சொல்லிப்பார்க்கிறேன்....
"நாம்"

என்ன செய்வேன்??

கரும்பலகையின் வெண்மை அனைத்தும்
கவிதையாகத் தெரிந்தால்?
"ஜாவா" படிக்கையில் தமிழ்
"வா வா" என்றழைத்தால்?
விசைப்பலகையின் வடிவனைத்தும்
உயிரும் மெய்யுமாய் தெரிந்தால்???

கடல்

உன் மனம் என்ன கடலா?
இந்தக் 'கயலின்' வாழ்விடமாய் இருக்கிறதே! 

நாடி

உன் கிறுக்கல்கள் கூட
கவிதையாகின்றன எனக்கு...
உன் புள்ளிகள் கூட
கோலமாகின்றன எனக்கு..
உன் கை பட்டு கசங்கிய காகிதம்
நட்சத்திரமாய் எனக்கு..
உன் கையாலிட்ட அன்னம்
பிரசாதமாகிறது எனக்கு..
விசித்திரமான நோய் தான்..
நாடியில் ஏதும் பிழையில்லை..
நீ என்னை நாடி வந்தால் என்ன பிழையா??

21.1.11

மொட்டை மாடி

குழவிகளின் மகிழ்வுலகம்..
சிறகுடைந்தவனின் வானம்..
சோம்பேறியின் அதிகபட்ச உயரம்..
எனக்கு மட்டும் கோவில்,
தேவதை உன் தரிசனம் தருவதால்..

20.1.11

தன்னிசைத் தேடல்

கண்ணாடியில் முகம் பார்க்கையில்..
என் பெயர் சொல்லி எவரோ அழைக்கையில்..
என் கொலுசுச் சத்தம் மௌனம் விலக்குகையில்..
அழைப்புமணி என் கற்பனை கலைக்கையில்..
தன்னிச்சையாய் மனம் தேடுகிறது
உன்னை!!!

அணி(நீ)கலன்கள்

நீ என் காதணி..
நான் தலையசைக்கும் போதெல்லாம்
மகிழ்ந்து ஆடுகிறாயே!

நீ என் கழுத்துச் சங்கிலி..
என் இதயத்தோடு எப்போதும்
இணைந்திருக்கிறாயே!

நீ என் கைவளையல்..
என் மௌனத்திற்கும்
குரல் அளிக்கிறாயே!

நீ என் மோதிரம்...
நான் உணவுண்ணும் போதெல்லாம்
சேர்ந்து உண்ண விழைகிறாயே!

நீ என் கொலுசு..
உன் சத்தம் சிலநேரம்
என்னையே சிலிர்க்கச் செய்கிறதே!!!

வளையோசை

என் வளையோசையின் வகையறி !!
உனக்கு அழைப்புமணியா தடுப்புச்சத்தமா என்று..

17.1.11

அழகு

கடவுளின் அழகுணர்ச்சி
மிக அழகாய் வெளிப்பட்ட
இரண்டு இடங்கள்..
நீ,
கவிதை...
குற்றமுண்டோ என் கவியில்?
இரண்டும் ஒன்று தான் என்பதால்...

பட்டதாரி

பட்டம் விட்ட போது
இருந்த மகிழ்ச்சி கூட
பட்டம் வாங்கிய போது இல்லை..
எதிர்காலம் பற்றிய பயத்தில்!

பொங்கல்

பொங்கும் பொங்கலில்
காற்றைத் தவிர
மகிழ்ச்சி இல்லை..
விடுதிக்கு திரும்பும் நினைவில்..

குங்குமம்

புனிதமானது தான்..
விதவையின் நெற்றியையும்
அலங்கரிக்கத் தொடங்கினால்..

16.1.11

ஆன்மீகம்

பயமாய் இருக்கிறது
காவி சாயத்தில்
மெழுகு ஒளியில்
சாம்பிராணிப் புகையில்
ஆன்மா தொலைந்துவிடுமோ என்று!

12.1.11

இதயம்

என் இதயம் நீ தான்
என்றாயே!
இப்போது என்ன
இதயமாற்று அறுவைசிகிச்சை
செய்துகொண்டாயோ!?

பயணத்திசையில்..

பயணம் முன்னோக்கி..
நினைவுகள் பின்னோக்கி..

இப்படி ஒரு பயணம்தான்,

நினைவிலும் வந்தில்லா
ஓரிடத்தில் கல்லூரி மாணவி
என்ற பரிமாணம் தந்தது..

நுழைவுத் தேர்வுகளாக
வாழ்வில் நுழைந்து
ஏமாற்றம் தந்தது..

பேச்சு நிகழ்வுகளால்
புகழும் பரிசுமாய்
வாகை சூட்டியது..

உறவு வீட்டுப்
பயணங்களாய் முகத்தில்
புன்னகை ஏற்றியது..

தாய்மடியில் பெயர் பலகைகள்
வாசிப்பினால்
தாய்மொழி பழக்கியது...

நாலு சுவர் தாண்டி
முதலடி வைத்த
பள்ளிப்பருவம் தந்தது..

தொடங்கியது ஒரு நாளில்
தெய்வம் அளித்த முதல்
அறைதாண்டிய அந்நாளில்
மூச்சு விட பழகிக் கொண்டே!!!

கைம்பெண்

நீயன்றி நிறமில்லை
என்றிருக்கிற என்
சேலையையும் வாழ்வையும்
கறையாக்கப் பார்க்கிறது
இந்த சமூகம்..

5.1.11

மின்சாரம்

மின்னலில் இருந்து மின்சாரம்..
சாத்தியம்தான்..
உன் பார்வை மின்னல்
படும்போது எனக்குள்
மின்சாரம் பாய்கிறதே!

அம்மா

என்னால் உன்னைப்பற்றி
கவிதைகூட படைக்க முடியவில்லை..
என்னைப் படைக்க என்ன
பாடு பட்டாயோ??

மருதாணி

மருதாணி இட்டுக் கொள்ளும்போதெல்லாம்
என் கை உன் நினைவைக் கொள்கிறதோ?
அதுவும் கன்னம் சிவக்கிறதே!!

4.1.11

உயிர்

கவிதை என்று பெயரிட்டிருந்தாலும்
உயிர் இல்லாத கிறுக்கல்களாய் தான்
இருக்கின்றன..
என் எழுத்துக்கள்
உன் பார்வை படாதவரை...

அக்கறை

விளக்கொளியில் விரல் சுட்டுக்கொண்ட போது
எனக்காய் பதறினாய்!
நீ சொல்லால் சுடும் முன் விளக்கு
முந்திக்கொண்டதாலா?

சிறு கத்தி என்னைக் கீறி
சிறு துளி செந்நீர் சிந்தியதற்கு வெகுண்டாய்!
என் இதயத்தை கீறும் உன்
பணியை பங்குபோட்டுக் கொண்டதாலா??

சொர்க்கம்

சொர்க்கம் செல்ல விருப்பமில்லை..
வாழ்வு என் தாய் மடியில் கழியும் வரை..

தேடல்

வார்த்தைகளின் வேலைநிறுத்தம்,
கற்பனையின் கடுங்கோபம்!!
மனதினுள் என்ன கோரிக்கை?
பேனா தலை குனிய தடுப்பேதோ உளது!
தமிழ்த்தாயே! மகளின் மேல்
சினமேன்றால் உணவளிக்க மறுப்பது முறையோ?
மையிலோ மையலிலோ தடையில்லை..
மனமுடைய நியாயமே இல்லை..
இல்லாத ஒன்றைத் தேடுவது போல்
ஓர் உணர்வு..
தேடுகிறேன் கவிக்குள் கவியை..

பூமி

துச்சாதனர்கள்தாம் நாம்..
பூமித்தாயின் ஒசோன் சேலையை
துகிலுரிகிறோமே!!

தனிமை

மழையும் சுடுகிறது, நின் பிரிவில்..
வழியும் எதிர்க்கிறது, தனி நடையில்..
இதழும் நீள்வதில்லை, நின் நினைவில்..
வெறுமை விலகுவதில்லை,
நின் நினைவுகளும்....

2.1.11

கவிதை

நீ கவிஞனாய் இல்லாவிட்டால் என்ன ?
என் கவிதையாய் இருக்கிறாயே!!!

விமர்சனம்

விமர்சனங்களைக் கேட்டு
விரக்தி அடையாதே!
கரித்துண்டில் யாரும்
தோஷம் பார்ப்பதில்லை..
பித்தளையை யாரும்
உரசிப் பார்ப்பதில்லை..
கூழாங்கற்களை யாரும்
பட்டை தீட்டுவதில்லை..

அம்மா

என் உயிரே என்று
உன்னை அழைப்பதற்கு இல்லை..
என் உயிர்
நீ எனக்கிட்ட பிச்சை..

ஏக்கம்

உன்னுடன் இருக்க
உன்னுள் நுழைய
உன் மீது தவழ
உன்னை முத்தமிட..
- அகதிகள் தாய்நாட்டை நோக்கி..

வெறுப்பு

உன் கண்களைப் பார்த்ததில்
ஓவியங்கள் வெறுத்தேன்..
உன் வார்த்தைகள் கேட்டதில்
கவிதைகள் வெறுத்தேன்..
உன் குரலைக் கேட்டதில்
இசையை வெறுத்தேன்..
நீ இல்லா நேரங்களில்
என்னையே வெறுத்தேன்...

வெறுமை

உன் வெறுமையால் என் மனம்
நிரம்பியிருக்கிறதென்றால்
என் மனதில்
வெறுமையா? முழுமையா?

இசை

இசையைப் பெரிதாய் ரசித்ததில்லை..
நான் முதன்முதலாய் ரசித்த இசை,
உன் மௌனம்...

நாணம்

உன்னை நினைக்கும் போதெல்லாம் கவிதை எழுதத் தொடங்குகிறேன்..
உன் நினைவில் என் பேனா நாணித் தலைகுனிகிறதோ!!

கோபம்

உன் மேல் என் பேனாவுக்கு கோபமாம்..
நீ வந்தபின் அதன்மேல் கொண்ட காதல் குறைந்துவிட்டதென்று

அடம்

அடம் பிடிக்கிறது என் பேனா..
கிறுக்கினாலும் உன் பெயர்தான்..

பிரிவு

என்றாவது அடிக்கிறது சாரல்
என் ஜன்னலில்..
என்றாவது நுழைகிறது வெயில்
என் வாசலில்..
என்றாவது தவழ்கிறது தென்றல்
என் சுற்றிடத்தில்..
நீ இருக்கிறாய் அன்று என்னோடு..
அன்று தெரிகிறது
உன் பிரிவு என்னிடம் என்னென்ன பறித்ததென்று!!!!!!!!!!!!!

பயம்

உன் பெயரை எழுதவும் பயமாயிருக்கிறது..
பேனா முள் உன்னைக் குத்தி விடுமோ என்று!!