30.3.11

சாளரம் திறக்கையில்..


சாளரம் திறக்கிறாய், முதன்முதலாய்
ஒளியைச் சந்திக்கின்றன என் விழிகள்...

“நிலா நிலா ஓடி வா”வும்
“சின்ட்ரெல்லா”வும்
ரசிக்கிறேன் விழிவிரித்து...
விரிக்கிறாய் விழி நீயும் என்னோடு..

அம்புலிமாமாவும் கோகுலமும்
எழுதுக்கூட்டுகிறேன்...
படிக்கிறாய் பக்கமொன்றைப்
பலமணிநேரம் பக்கத்தில் படுத்தபடி..

குறுந்தகடுகளின் கூட்டம் சேர்த்து
வரிபிழறாமல் ரஹ்மானைப் பழகுகிறேன்
ராகம் தவறாமல்...
ரசனை கூட்டுகிறாய் நீயும்.

என் மருதாணிக் கிறுக்கல்
பழக கை தேடி உன் கரம் கேட்கிறேன்..
உள்ள பணியனைத்தும்விட்டு
கைநீட்டி சிரிக்கிறாய்...

சிட்னி செல்டனுக்கும் சுஜாதாவுக்கும்
மாறி புதிதாய்ப் பல
கற்றதாய் நினைக்கையிலும் தோழி
நீ ரசிக்கிறாய் என்னையும்..

“அம்மாவுக்கு எதுவுமே தெரியாது” மாறி
“அம்மாவுக்கு எல்லாம் தெரியுமென எனக்குத் தெரியாது”
உணர்கிறேன் இன்று,
கேள்வி எழுப்பி வெட்கச் செய்கிறது மனசாட்சி..
“அம்மாவின் உண்மையான ரசனை என்ன?”

விடையில்லா மௌனத்துடன் ரசிக்கத் தொடங்குகிறேன்
“நிலா நிலா ஓடி வா”
நான் ஒரு புது சாளரம் திறந்து..

16.3.11

கனவுகள் இனிதாகட்டும்!!


இதுவரை திரையிலும் கண்டிராத
ஒரு பனிச்சூழல்..
திட்டுத்திட்டாக ரோஜா இதழின்
நிறத்தில் சில துளி அடையாளங்கள்..
நகர்கிறது குவியம் மேல் நோக்கி..
என் கடைவிழி வழிந்தோடும் குருதிக்கண்ணீர்
கீழுள்ள பனிமேல் பட்டு
தோன்றுகிறது ரோஜாநிறத் திட்டு..

மையிட்டது போல்
குருதி நிறை கண்கள்
திரண்டிருக்கின்றன ஒரு திசையில்..
பாசமாய்ப் பல நாள் சித்திரமென
பார்த்து ரசித்த உன் பாதத்தடங்கள்
கொடூரமாய்த் தெரிகின்றன முதன்முறையாய்,
தடத்தில் குதிகால் என் பக்கம் என்பதாலோ!

கண்ணுக்கெட்டும் தொலைவுமட்டும்
உன்னைத் தேட நினைத்துப்பின்
கானல்நீராய் உன்னைக் கனாவிலும்
காண விருப்பமில்லாமல் கண்திறக்கிறேன்..

கண்மூடாதிருக்கும் என் மடிகணினியின்
திரையில் முகம்காட்டி முகநூலில்
சொல்கிறாய் “கனவுகள் இனிதாகட்டும்!”


நன்றி
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31103204&format=html

8.3.11

இன்று மகளிர் தினம்!

வாழ்த்தும் உள்ளங்களே!

மாதம் சில சென்று
மாங்காய், மண் தின்று
மனம் பூரித்து இருப்பவள்
கருவினை சோதித்து
"பெண்ணா?"
முகம் சுளித்து
வாழ வரம் வாங்கி வந்தவளை
கருவினில் கருகச் செய்யும்
கயமை என்று ஒழியுமோ,

பள்ளி, கடைவீதி என்று
தேவைக்காய் தனியே வழியனுப்பி
உள்ளுக்குள் எரியும்
தாய் வயிற்று நெருப்பும்,
மணமுடித்த பின் வரதட்சணை
என்ற பெயரால் வதைக்கும்
புகுந்த வீட்டு வெறுப்பும்,
என்று அணையுமோ,

இல்லத்திலும் இப்புவியாளும்
அரசியலிலும் முப்பதிமூன்றிற்கு
மூக்காலழும் நிலை மாறி
அரசியலிலும் இனி இல்லத்திலும்
இடஒதுக்கீடே தேவைப்படாத
சமத்துவம் என்று நிலவுமோ,

அன்று கொண்டாடுவோம் "மகளிர் தினம்"!!

6.3.11

உவமை

உடலுறையும் உயிர் ஒருநொடி
உறைவது போலோர் உணர்வு..
ஊசி ஒன்று உச்சி முதல் அடி
தொட தீண்டிடும் வேதனை..
நாளங்கள் நிரப்பும் குருதி
சிறிது ஓய்வெடுக்கும் வலி..
நெருப்பினால் சுட்டுப் பின்
வெந்நீரில் குளிப்பாட்டும் வெம்மை..
மார்கழி மாத குளிரிரவில்
பனிக்கட்டி மீது உறக்கம்..
என்றெல்லாம் உவமை தேடித் தோற்கிறேன்,
உன் பிரிவு தரும் வலிக்கு..

5.3.11

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி ஆட்டத்தில்
வித்தகனா நீ??
என் இதழ் புன்னகையின் பின்
ஒளிந்து இருக்கும் சோகத்தை
சரியாக கண்டுபிடிக்கிறாயே
ஒவ்வொரு முறையும்!!