22.4.11

கலியுக அகலிகைகள்



புழுவாய்க் கூட்டிலடைந்து
கிடந்து பல்லாயிரம்
போராட்டம் நடத்திப்பின்
வெளிவந்தோம்!
ஆரம்பத்தில் கல்லடி, மரத்துப்போனது!
பலநூறாண்டாய்த் தொடர்கிறது சொல்லடி..
ரணங்கள் ஆறுவதே இல்லை..

இன்று நம் சமூகத்தில்
அந்தப்புரம் பல கொண்டவனெல்லாம்
உத்தமன் என்ற போர்வைக்குள்..
தனிமையில் வாழ்வாளாயின்
கண்ணகிக்கும் கிடைக்கும்
“கேடுகேட்டவள்” பட்டம்!
பாரதி!! இப்பட்டம் ஆளவா பாரினில் பெண்கள்??

வெற்றியில் மாலைகள் சூடவேண்டிய
தோள்களுக்கு அநேக நேரங்களில்
புதுச் சிலுவைகள்!

சாதிக்கும் சாதியின்மேல்
சகதியடிப்பது புதிதல்ல..
அடிக்கப்பட்டது , எங்கள்
வளர்ப்பின் மேல்,
படிப்பின் மேல்,
கலையின் மேல்,
நம்பகத்தின் மேல்..
தண்ணீர்பட்ட தாமரை இலையாய் இருந்தோம்!

தொடர்கிறது, எங்கள்
நடத்தையின் மேல்,
கொண்ட காதலின் மேல்,
கற்பின் மேல்..
மனபாரத்தால் மூழ்கடிக்கப்படுகிறோம்!

எங்களையும்
எங்கள் மனதையும் கல்லாக்கிக்கொண்டு
வாழும் ‘கலியுக அகலிகைகள்’ !!!

18.4.11

பின்தொடர்கிறேன்..


உன் வலைப்பூவின் பின்தொடர்வோர்
பட்டியலில் புதியதாய் ஒருவர்..
சொடுக்கிப் பார்க்கிறாய்..
அடையாளம் தெரியாமல்
அப்படியே விட்டுச் செல்கிறாய்..
தினந்தினம் படிக்கிறேன்,
உன் அனுபவங்கள் மலர்கின்றன
வலைச்சரத்தின் பூக்களாய்,
என் நினைவுகளும் மலர்கின்றன...
உணவு மேசையில் உணவூட்டிக்
கொண்டே உன் விழிவிரிந்த
முகபாவங்களோடு தினந்தினம்
கேட்ட உன் தினக்கதைகளை
மறக்க முடியாமல் உன் அம்மா...

நன்றி: திண்ணை..

13.4.11

அன்புடன் விழுது

அன்பு
பாசம்
நேசம்
காதல்
பகிர்வு
நம்பிக்கை
இச்சொற்களுக்கெல்லாம்
அர்த்தம் கற்றுத்தரும் வேலை
இருந்ததில்லை உங்களுக்கு..
உங்கள் உறவு கற்றுத்தந்தது நேரடியாய்..

22 ஆண்டுகளும்
தினந்தினம் புதியதாய்த்
துளிர்த்தது போல் உங்கள் அன்பு..
கற்றுத் தரும் இந்த தலைமுறைக்கு
காதலின் மகத்துவம்...

அதனால் தானோ புத்தாண்டில் மணம் செய்துகொண்டீர்?

வாழ்வு தரட்டும் புதுப்புது வழிகள்
உங்கள் நேசம் பெருக..


வேர்களை திருமண நாளுக்காக வாழ்த்தும் விழுது...

8.4.11

காலங்கள் நீ


காலங்கள் நீ
உன் சுவாசமும் சொற்களும்
எனைத்தீண்டி நரம்புகளினூடே
பாய்ந்து சிலநேரம்
சிலிர்க்கச் செய்கையில் கார்காலம்..!

அன்பின் மிகுதி தொட்டு
ஆரவாரக் கூச்சல் விட்டு
அமைதியாய் உயிரின் விளிம்பு தொடும்
அணைப்பில் நீ குளிர்காலம்..!

இமையாய் விழியெனைக் காத்து,
இறுக என் கரம்பற்றி,
நம் அடித்தடம் நாலன்றி இரண்டாய்த்
தெரிகையில் நீ இளவேனில்..!

சிறு சிறு சேட்டை செய்து
சிலநாள் சினேகமாய் உன்னைச்
சீண்டி நான் சிரிக்கையில்,
செல்லக் கோபத்தோடு நீ முதுவேனில்..!

உனக்குப் பொருத்தமாய் நானும்
எனக்குப் ஏற்றதாய் நீயும்
தேடியெடுத்த ஆடை உடுத்தி
இணையாய்ப் பெருமிதத்தோடு நடக்கையில் முன்பனி..!

நாளின் ஓட்டம் ஓய்ந்து
ஆடிய ஆட்டத்தின் அசதி தேய
உன் மீது முகம் புதைத்து கண்ணையர்கையில்
ஆறுதலாய் தட்டிக்கொடுக்கும் நீ பின்பனி..!

என் ஆண்டின் ஆறு காலமும் நீ!
என் வாழ்வின் முக்காலமும் நீ!

4.4.11

சுயம்



அழுந்தத் தாழிடுகிறேன் கதவை
வெளித்தொடர்பு முழுதாய்த் துண்டித்து..

கழற்றி மாட்டுகிறேன்
துப்பட்டாவோடு என் சுமைகளையும்..

காலணி அவிழ்க்கும் போது
என் கவலைகளையும் சேர்த்து..

முகம் கழுவும்போது என்
முகமூடிகளையும் அடியோடு..

பயம், பகடு, பாசாங்கு
பொறாமை, பெருமை எனுமனைத்தும் நீங்கி

விளக்கை அணைக்கையில்
இருள் படர்கிறது என் சுயம் மீட்கப்பட்டு...




நன்றி 
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311041021&format=html

1.4.11

நீ..


நீ நடந்த அடித்தடம் அழியவில்லை
என் வீட்டு முற்றத்தில்..
நீ புழங்கிய மணம் மறையவில்லை
என் சுற்றத்தில்..
நீ பேசிய சொற்கள் எதிரொலிக்கின்றன
அலைபேசியின் அழைப்பொலியாய்..
நீ கொஞ்சியதால் நிரம்பி வழிகிறது
என் மின்னஞ்சல் உள்பெட்டி..
நீ சிரித்த சில தருணம் தாங்கியபடி
என் மடிக்கணினியின் முகப்பு..
நீ கிறுக்கிய கிறுக்கல்களைப் பிரதிபலிக்கும்
என் அறையின் உட்சுவர்..
உரிமை மறுக்க முயற்சிக்கிறாய்
எனக்கு மட்டும்,
உன்னைத் தாங்கிட என்றைக்கும்..