24.5.11

நில்லாத ஓட்டம்


நான் சிந்திக்கத் தொடங்கிய
ஒரு நாளில் நீ பேசத் தொடங்கினாய்!
என் மூளையையும் இதயத்தையும்
மாற்றி மாற்றி படமெடுக்கும்
கதிரியக்கமானாய்!
என் மனமுறைவதைச் சரியாய்ச்
சொல்கிறாய் என்று வியந்திருக்கிறேன் பலநாள்..
நான் சிந்த முடியாது
பகட்டுப் புன்னகையால் மறைத்த
கண்ணீரையும் கோபத்தையும் சிந்தியது நீ!
வரும் நாட்களில் என் துணைவனுக்கும்
வரக்கூடும் பொறாமை
நம் நெருக்கம் கண்டு..
வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்
என் சிந்தனை மரிக்கும் வரை
நில்லாத உன் ஓட்டம்..
என் அன்புக்குரிய எழுதுகோலே!

22.5.11

தூசி தட்டுதல்



உலக உருண்டையின்
ஏதோ ஒரு பகுதியில்
நடக்கும் அழகிப்போட்டி..
மட்டைப்பந்து போட்டியில்
நெட்டை வீரர் ஒருவரின்
ரெட்டை சதம்..
அரைகுறை ஆடை நடிகையின்
ரகசியதிருமணமும் தொடரும்
விவாகரத்தும்..
தெற்கில் எங்கோ ஒரு
வாய்க்கால் தகராறில்
நிகழ்ந்த குரூரக் கொலை..
நம்ப வைக்க முயற்சிக்கும்
தேர்தல் அறிக்கைகளும்
அது குறித்த
ஆட்சி மாற்றங்களும்..
எத்தனை முறை
வாய் பிளந்து பார்த்தாலும்
திருந்தாத மக்களும்
பயன்படுத்திக்கொள்ளும்
உண்மை மகான்களும்..

என எதுவும்
கிடைக்காத அன்று
மீண்டும் தூசி தட்டப்படுவார்
அன்னா ஹசாரேவும் அவரது கொள்கைகளும்..  

15.5.11

தட்டுப்பாடு


உடன் வரும்
வழக்கமாய் வர்ணிக்கப்பட்டு
அன்று கவனிக்காமல் விடப்பட்ட
வெண்ணிலா..
கடந்து செல்லும்
தீப்பெட்டி அடுக்கினாற்போன்ற
கட்டிடங்கள்..
தன் குறிக்கோள் மறந்து
தெரு நாய்களுக்கு அடைக்கலம்
தந்திருந்த குப்பை சூழ் குப்பைத்தொட்டிகள்..
குச்சி மட்டைகளும்
நெகிழி பந்துகளாலும்
ஆன மட்டைப்பந்து போட்டிகள்..
சிறுநகர வீதி..

ஏதோ சொல்ல நினைத்து
உன் கை சீண்டும் என் துப்பட்டா..
என் நாசி தீண்டும்
ஏதேதோ செய்யும் என
விளம்பரப்படுத்தப்படும்
உன் வாசனை திரவியம்..

காற்றும் எதுவும் புக முடியும்
இடைவெளியில் நாம்..
சொல் தட்டுப்பாடு,
என் மனதில் நிகழும்
வேதிவினை போன்றவற்றை விவரிக்க மட்டும்.. 

14.5.11

என் பேனாவின் மௌனம்


மூளை அறிந்தும் இதயம்
ஏற்க மறுக்கும் சில விஷயங்களுள்
ஒன்று..
கல்லூரி வாழ்வின் 1461 நாட்கள்
முடிந்து போனதாய்
ஏற்க முடியாதிருக்கும் உங்களுக்கு நான்,

கல்லூரிக்குள் நுழைகையில்
நினைத்ததும் இல்லை...
இரண்டு வருடமாய் இங்கு
எனக்கு உடன்பிறப்புகள் இருப்பார்கள் என்று!
வாழ்க்கைப் பாடம் கற்பிக்க!

சேர்ந்து செலவிட்டது
சில நேரங்கள் தாம்!
பல நாள் சேர்ந்து சிரித்திட மனங்களும்
சில நாள் பிடித்து அழுதிட கரங்களும்
உங்களிடம் கண்டேன்!

என்றும் தொடர்பில் இருப்போம்
எனும் வாக்குறுதிகளின்
வாழ்நாள் அறிந்தவள் நான்..
எதேச்சையாய் எப்போதாவது
என் நினைவு வந்தால் நீங்கள்
சிந்தப் போகும் ஒரு சிறு புன்னகை போதும்!

உங்களைப் பிரிகையில்
உங்களுக்கென ஏதோ கிறுக்க நினைக்கிறேன்
தொண்டை அடைத்து மனம் கனத்து
என் பேனாவும் காக்கிறது மௌனம்!!