14.12.12

இடமிருப்பு


என் வாழ்வில் உனக்கான
வெளி குறைந்துவிட்டதாய்
புலம்புவதல்லாத தொனியில்தான்
சொல்ல முயற்சிக்கிறாய்!

நீ நிறைக்கும் இடமது, சமீபமாய்
கூழாங்கல்நிறை பானைக்குள் விழும்
மணலின் இடம் பிடித்திருக்கிறார்கள் சிலர்..

கூட்டல் கழித்தல்களுக்கு இடமில்லாத
மாறிலியாய் இருக்கிறது உன் இடம்!

புரிந்துகொள்ளாதாதற்கென்று உன்னைக்
கோபிப்பதில் அர்த்தமில்லை..
புரிந்து கொள்ளும்படி நடந்துகொள்ளாத
என்னைத்தான் நொந்துகொள்கிறேன்...

அனுமனின் உக்தியை நினைத்தோ
தானாய்க் கிழிகிறது நெஞ்சம்!

16.11.12

ஐம்புலன்

செவி சேர்கிறது தூரத்து
சேவல் அலாரம் ,

நாவின் அடக்கத்தையும்
சோதித்து விடுவதென்று

நாசி துளைக்கும் பரிச்சயமான
குளம்பி  மணம் ,

திறக்கும் போதே கண்களுக்கு
வேண்டும் அன்னையின் தரிசனம்,
மெய் கேட்டது அவளின் ஸ்பரிசம்..
விழிக்கிறேன்
துணிக்குவியலும் புத்தகக் கூட்டமும்
சூழ ஏமாந்தன என் ஐம்புலன்கள் 
விடுதி அறைக்குள் !!!

2.9.12

மனப் பொருளின் நிலை

தெரியாமல் வாசித்துவிட்டப் 
பழைய குறுஞ்செய்திப் பெட்டகம்
அழுந்தக் கிளறுகிறது ஆழ்மனதை!

அழிக்க மறந்திட்ட அந்தப்பெட்டகமும்
அழிக்க மறுத்திடும் உன் நினைவுகளும்
கால இயந்திரமாய்க் கண் கலங்கச் செய்கின்றன!

என்னால் உனக்கோ, உன்னால் எனக்கோ
தெரியவந்த எவரையும் நிமிர்ந்து பார்க்க முடிவதில்லை

திரவப் பொருளாய் உன் சூழல்,
நான் நீங்கிய வெற்றிடம் நிரப்ப
சுற்றிலுமிருந்து பாய்பவர் பலர்!

என் மனதைப்போலில்லை,
திடப் பொருளாய் என் சூழல்...
நீ நீங்கிய இடத்தை வெறுமை நிரப்புகிறது!

நேரில் எப்போதும்
சந்திக்க நேர வேண்டாம்..
காற்றில் கலக்கும் என் கண்ணீர்,
மனதின் கொதித்தல் விளைவு!15.8.12

புகைப்பட நொடி

கண்ணுக்கெட்டுகிற தொலைவிலிருந்து
பார்க்கிறேன்!
புகைப்படத்திற்காய்ச் சிரிக்கிறாய்!
அந்த செயற்கைச் சிரிப்பிடம் 
வெட்கித் தோல்வி அடைகின்றன
சுற்றுவட்டாரத்தின் பல இயற்கைச் சிரிப்புகள்!
உன் முகத்தின் பிரகாசம் நிறைத்துவிடுகிறது
சுற்றுப்புறத்தின் ஒளிக்குறைவை!
உன் கன்னக்குழியின் அழகு மொத்தத்தையும்
குவிக்க முடியாமல் திணறுகிறது
நிழற்படக்கருவியின் குவியாடி!
வண்ணப் புகைப்படத்தில் உன்னைத்தவிர
எல்லாமே கருப்பு வெள்ளையாய்த்தான் இருக்கும்!
விசை அழுத்தப்பட்டு புகைப்படத்தில்
நீ பதியும் அந்த நொடியில்
ஸ்தம்பிதுப்போகிறது என் உலகம்!!!

16.6.12

கூடு

நீண்ட நாளைக்குப் பிறகான
சந்திப்பில் நம்மிருவருக்குப்
புதிதல்லாத புல்வெளியில்
அமர்கிறோம்! புதிதாய்
முளைத்திருக்கிறது இடைவெளி!
பெயர் தெரியாத பறவையொன்று
தலைகளை உரசியபடி பறக்கிறது,
சருகொன்றைச் சுமந்தபடி!

மௌனங்கள் ஊடாட
பரஸ்பர விசாரிப்புகள்!
காற்று கிழிக்கப்படுகிறது,
இந்த முறை ஒரு குச்சி!

தயக்கங்களுக்குப்பின் நடுவில்
வந்துவிட்ட நிகழ்வுகள்,
மனிதர்களென ஆழ்ந்திருக்க,
கவனக்கலைப்பில், அலகைக்குத்தாத முள் ஒன்று!

பெருமூச்சுகளோடு சிலநினைவுகளை
அசைபோட்டு தன்னிச்சையாய் வெளிவந்த
கண்ணீர் மறைக்கத் திரும்புகையில்,
கொத்தாய்க் கொஞ்சம் நார்களோடு மீண்டுமவர்!

மணிகள் கொண்டாலும், மனம் கொள்ளாமல்,
கட்டாயமாய்க் கைபிடித்து எழுந்து
தூசிதட்டுகிறோம், நம் ஆடைகளையும்!
ஒரு கூடு கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது!!!

14.6.12

பார்வை

பலரைப் பார்க்கிறேன்!
சிலரை அன்போடு,
சிலரைப் பரிவோடும்
நட்போடும்..
வேறு சிலரை நம்பிக்கையோடு,
சில நேரங்களில் மரியாதையோடு!
ஒரு பார்வையின்போது மட்டும்
மூளை வேலைநிறுத்தம் செய்கிறது,
இதயம் அதிகமாய் இயங்குகிறது!
கருவிழிகள் பத்திரப் படுத்துகின்றன
உன் பிம்பத்தை!

13.6.12

அழகான தருணம்

பின்னோக்கி திருப்பப்படும் நாட்குறிப்பில்
விரியும் காட்சிகளுக்குள்
எப்படியோ புகுந்து விடுகிறது
இப்படி நடந்திருக்கலாம்!
இதைச் செய்திருக்கலாம்!
இப்படி இருந்திருக்கலாம்!
என்பதான அங்கலாய்ப்புகள்.
நீ தென்படும் காட்சிகள் மட்டும்
விதிவிலக்காய்..

அந்த தருணங்களை விட அழகாக
எந்த ஒரு தருணமும் இருக்க முடியாது!
அதே தருணம் உட்பட.

7.6.12

ஒரு பயணத்தின் கவிதை

தினசரி ஓடும்
கனரக வேகத்தில்
மறக்கப்பட்டோ
புறக்கணிக்கப்பட்டோ போகின்றன
கவிதைக்கான தருணங்கள்!

ஒரு பயணத்தின் விடியலில்,
பை நிரப்பும் படலத்தில்,
சகபயணியின் இருப்பில்,
தோழமை ஒன்றின் புரியா மௌனத்தில்,
மனம் கிளரும் ஒரு ஜன்னலோரக் காட்சியில்,
புரிதல் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பொன்றில்,
திணறிச் சிரித்த சிரிப்புகளில்,
முடிவின் பிரிவுக் கண்ணீரில்
என்றான எதிர்பாரா
தருணங்களில் தவிர்க்க முடியாது
வெளிப்பட்டு விடுகின்றன கவிதைகள்!

6.6.12

விளையாட்டு

வேண்டுமென்றோ கட்டாயத்திலோ
பாதியில் விடப்பட்ட ஆட்டத்தின்
சேதி சொல்கின்றன,
சுண்ணக்கட்டி தாயக்கட்டத்தின் மேலுள்ள
புளியங்கொட்டைக் காய்கள்..

புதிதாய் வாங்கிய இந்த வீட்டில்
இதற்கு முன் இருந்த முகம்தெரியா
குழந்தைகளின் நினைவில் நான்!
"இந்த வீட்ட இடிச்சிட்டு புதுசா பெரிய்யய
வீடு கட்டப்போறோமா அம்மா??"
என்றபடி வந்து என் காலைக் கட்டிக்கொள்ளும்
என் குழந்தையின் கையில் புதியதொரு
லூடோ போர்டும் நெகிழிக் காய்களும்!!!

1.4.12


மோப்ப நாய்களின் படையெடுப்பும்
காக்கிச் சட்டைகளின் அணிவகுப்பும்
சுற்றத்தினரின் பரபரப்பும்
அடித்துச்சென்றிருந்தன
இறந்தவரின் மரண ஓலத்தையும்
அந்த சத்தத்தையும் மிஞ்சிவிட்ட,
கொன்றவரின் இதயத்துடிப்புச் சத்தத்தையும்!

எந்த நொடியில்,
எந்த மனநிலையில்,
எந்த கைகலப்பில்,
நடந்ததென்று அசைபோட்டுப்பார்க்க
இருவருக்கும் நேரமிருந்திருக்க நியாயமில்லை!

தொழிலாய்ச் செய்பவரோ,
தெரியாமல் செய்தவரோ!
ஜன்மப் பகையோ,
உயிர் காக்கும் வகையோ!

நொடிநொடியாய் நிகழவிருக்கிறது
ஒருநாள் தலைப்புச்செய்தி அல்லது
ஒரு வார புரளிப்பேச்சுக்குள்
அடங்கிவிடாத மரணம் ஒன்று
ஒரு இதயத்துக்குள்!

காற்றில் கலந்து வருகிறது
இனம்காண முடியா ஒரு துர்நாற்றம்!

18.3.12

வெற்றுத்தாளின் வெறுமை

தென்றலும் தோழியும் துணையிருக்க, 
புன்னகையும் பென்சிலும் என் இதழிலோடுவது 
கண்டு கேட்டாள், “கவிதையா?”
புரியாத சிரிப்பொன்று பதிலாய்க் கிடைக்க
“காதலா?” என்றபடி வெற்றுத்தாளில் எதிர்பார்ப்புக் கண் பதித்தாள்!
பெண்டுலத்தின் இரு நொடிப் பயணமாய் நான் தலையசைக்க
காற்றிழந்த பலூனாய் மீண்டும் தன் மடிக்கணிணியில் மூழ்கிப்போனாள்!

மனதில் அப்போதுதான் அந்தக் கேள்வி உதித்தது,
காதல் இல்லை! வேறென்ன??
பாசமா? பசையில்லை!
நேசமா? நெருக்கமொன்றும் அதிகமில்லை!
நட்பா? அதைத்தாண்டிய ஈர்ப்பொன்று இருக்கிறது!
குழப்பத்தையும் ரசித்துக் கொண்டிருக்கையில்,
அலைபேசி முகமொளிர, நானும் அதைத்தொடர 
திரையில் ஒளிர்கிறது அந்தப்பெயர்! 
வெற்றுத்தாள் வெறுமையால் வழிகிறது! 

10.3.12

வண்ண உலகும் வண்ணமிலா உலகும்


பிடித்த அந்த இசையை எங்கே கேட்டாலும்
இப்போதெல்லாம் ஒரு வெறுப்பு ஊற்றெடுக்கிறது
இம்முறையும், நிறுத்திவிடவேண்டுமென்று 
அரைநினைவிலும் தன்னிச்சையாக ஸ்நூஸ் செய்யப்படுகிறது
காலைநேர கைப்பேசி அலாரம்!

மீண்டும் அந்த வண்ணமிலா உலகத்தின் 
கல்லூரிக் கலைவிழாவில் ஒரு டிராகனுடன் பாரதியின் பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்த பாலே நடனத்தைத் தொடரலாம் எனும்போது
முந்தைய நாளில் வலிதந்த அந்தப் பச்சைத்துரோகமோ  
அது குறித்த வலியோ ,
தொலைந்து போன பொருளொன்றின் நினைவோ 
எதுவோ பிரவாகிக்க 
டிராகன் தன் சாந்த சொரூபத்தைக் கலைத்து நெருப்பைக் கக்குகிறது! 

அந்த சமயத்தில் மீண்டுமொரு முறை அதே இசை,
இம்முறை வெறுப்போன்றும் தீவிரமில்லை...
கண்முன்னிருக்கும் வண்ண உலகை அடுத்த 16 மணிநேரத்திற்கு 
எதிர்கொள்ள வேண்டுமென்பதைத் தவிர!

8.2.12

விடைபெறுதல்


வீட்டில் சகுனங்களில் நம்பிக்கை இருந்திருக்கலாம்
குறுக்கே போன கருப்புப் பூனை சாக்கில்
ஐந்து நிமிடங்கள் கூடுதலாய் இருந்திருக்கலாம்..

பொம்மைக்கூட்டத்திலிருந்து பிரித்து கொணரப்பட்ட
குழந்தையொன்றைக் கைப்பிடித்து நடத்திவருவதைப்
போலிருக்கிறது நான் இழுத்துவரும் ட்ராலி,
என் நடையின் நேர்கோட்டுக்குப் பின்னால் உருண்டுவந்தபடி..

“செல்போன் சார்ஜர் எடுத்து வச்சியா?”
“பனியா இருக்கு, ஸ்வெட்டர் போட்டு போ”
அக்கறைக்குரல்கள் துரத்தல்களாய்க் கேட்க
பிரியாவிடைபெற்று நடக்கிறேன்,
விடிந்தால் விரியும் மீண்டுமொரு விடுதி நாள்..

2.1.12

முதல் ஆண்டு :)


என் க”விதை”களில் முதன் முறையாய் கவிதையல்லாத ஒரு பதிவு! இந்த என் க”விதை”களின் கதை!
கல்லூரி முதல் ஆண்டின் இறுதியில் ஒரு நாள் என் சகோதரர் ஒருவர் எழுதிய கவிதைகளைப் படிக்க வேண்டும் என்று நான் கேட்டபோது முகநூலில் அவர் ஓர் உரலியை அனுப்பினார். அந்த வலைப்பூ தான் என்னைப் பதிவுலத்தை நோக்கி இழுத்தது. அவர் வலைப்பூ அதன் பின் எழுதப்படாமலே இருப்பது வேறு சேதி.
E.D sheetகளின் வெள்ளை வெளிகளும், பாடப்புத்தகங்களின்  கடைசி பக்கங்களும் கிறுக்கல் களங்களாய் இருந்து அதிகபட்சம் ஒரு செமஸ்டருக்குள் அவை இருந்த சுவடு தெரியாமல் போவது பழகிப்போயிருந்த எனக்கு கவிதைகளை சேகரித்து வைக்க ஒரு கிடங்கு கிடைப்பதாய் எண்ணித்தான் ‘என் க”விதை”கள்’ –ஐப் புத்தாண்டில் தொடங்கினேன்.
“வலைப்பூ எழுதத் தொடங்கினால் அதிலே முழு நேரமும் செலவிடத் தோன்றும், வேறு வேலை ஓடாது”..., “ஓரிரு பதிவுகளுக்கு மேல் எழுதத் தோன்றாது”.., “அவரவருக்கு இருக்கிற வேலைகளில் நீ எழுதுவதை யார் படிப்பார்கள்?” என்ற பல ஊக்குவிக்கும் கருத்துக்களுக்குப் பிறகு 2011க்கான  new year resolution ஆக வலைப்பூவில் பதிவிடத் தொடங்கினேன்.
உண்மையில் எழுத ஒரு வெளியாக மட்டும் இல்லாமல் இந்த பதிவுலகம் எனக்கு நிறைய பாடங்களையும் மனிதர்களையும் தந்திருக்கிறது. முகம் பார்த்திராத ஒரு அழகிய நட்பு வட்டத்தைத் தந்திருக்கிறது. கிறுக்கல்களையும் ரசித்து, உற்சாகப்படுத்தி, தேவையான நேரங்களில் ஆலோசனைகள் தந்து, என் எழுத்தையும் ‘கவிதைகள்’ என்று அங்கீகரித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூற இது சமயம் என்றெண்ணுகிறேன்.
இந்த 20 வருடங்களில் உங்களை எல்லாம் இந்த வலைப்பூவில் சந்தித்த இந்த ஒரு வருடம் எனக்கு சிறிதேனும் முதிர்ச்சியைத் தந்திருக்கிறது! என் நினைவுகளில் இடம் பிடித்திருக்கும் அனைத்து பதிவுலக சகோதர சகோதரிகளுக்கும் மனம் கனிந்த நன்றி!!! 

இருட்டறை

ஒளி அமிழ்ந்த ஓர் இரவு,
நிலவு ஒரு நாள் தற்செயல் விடுப்பில்..
வானுலக தினசரியில் அறிவிப்பொன்று கொடுக்கலாம்
விண்மீன்களைக் காணவில்லையென்று!
கண்டுகொள்ளப்படாதிருக்க கறுப்புச்சாயம் பூசிக்கொண்ட
மேகங்களை வெட்ட ஒரு மின்னலாவது வந்திருக்கலாம்!
யாருமிலா எனதறையின் உட்சுவர்களும்
இருளை உமிழ்ந்து கொண்டிருக்க,
ஒரு மெழுகுவர்த்தியைத் தேடி எடுக்கிறேன்..
என் தீப்பெட்டிக்குள் இருப்பதென்னவோ
இரண்டு எரிந்து போன தீக்குச்சிகள் மட்டும்