1.4.12


மோப்ப நாய்களின் படையெடுப்பும்
காக்கிச் சட்டைகளின் அணிவகுப்பும்
சுற்றத்தினரின் பரபரப்பும்
அடித்துச்சென்றிருந்தன
இறந்தவரின் மரண ஓலத்தையும்
அந்த சத்தத்தையும் மிஞ்சிவிட்ட,
கொன்றவரின் இதயத்துடிப்புச் சத்தத்தையும்!

எந்த நொடியில்,
எந்த மனநிலையில்,
எந்த கைகலப்பில்,
நடந்ததென்று அசைபோட்டுப்பார்க்க
இருவருக்கும் நேரமிருந்திருக்க நியாயமில்லை!

தொழிலாய்ச் செய்பவரோ,
தெரியாமல் செய்தவரோ!
ஜன்மப் பகையோ,
உயிர் காக்கும் வகையோ!

நொடிநொடியாய் நிகழவிருக்கிறது
ஒருநாள் தலைப்புச்செய்தி அல்லது
ஒரு வார புரளிப்பேச்சுக்குள்
அடங்கிவிடாத மரணம் ஒன்று
ஒரு இதயத்துக்குள்!

காற்றில் கலந்து வருகிறது
இனம்காண முடியா ஒரு துர்நாற்றம்!