2.9.12

மனப் பொருளின் நிலை

தெரியாமல் வாசித்துவிட்டப் 
பழைய குறுஞ்செய்திப் பெட்டகம்
அழுந்தக் கிளறுகிறது ஆழ்மனதை!

அழிக்க மறந்திட்ட அந்தப்பெட்டகமும்
அழிக்க மறுத்திடும் உன் நினைவுகளும்
கால இயந்திரமாய்க் கண் கலங்கச் செய்கின்றன!

என்னால் உனக்கோ, உன்னால் எனக்கோ
தெரியவந்த எவரையும் நிமிர்ந்து பார்க்க முடிவதில்லை

திரவப் பொருளாய் உன் சூழல்,
நான் நீங்கிய வெற்றிடம் நிரப்ப
சுற்றிலுமிருந்து பாய்பவர் பலர்!

என் மனதைப்போலில்லை,
திடப் பொருளாய் என் சூழல்...
நீ நீங்கிய இடத்தை வெறுமை நிரப்புகிறது!

நேரில் எப்போதும்
சந்திக்க நேர வேண்டாம்..
காற்றில் கலக்கும் என் கண்ணீர்,
மனதின் கொதித்தல் விளைவு!