18.3.12

வெற்றுத்தாளின் வெறுமை

தென்றலும் தோழியும் துணையிருக்க, 
புன்னகையும் பென்சிலும் என் இதழிலோடுவது 
கண்டு கேட்டாள், “கவிதையா?”
புரியாத சிரிப்பொன்று பதிலாய்க் கிடைக்க
“காதலா?” என்றபடி வெற்றுத்தாளில் எதிர்பார்ப்புக் கண் பதித்தாள்!
பெண்டுலத்தின் இரு நொடிப் பயணமாய் நான் தலையசைக்க
காற்றிழந்த பலூனாய் மீண்டும் தன் மடிக்கணிணியில் மூழ்கிப்போனாள்!

மனதில் அப்போதுதான் அந்தக் கேள்வி உதித்தது,
காதல் இல்லை! வேறென்ன??
பாசமா? பசையில்லை!
நேசமா? நெருக்கமொன்றும் அதிகமில்லை!
நட்பா? அதைத்தாண்டிய ஈர்ப்பொன்று இருக்கிறது!
குழப்பத்தையும் ரசித்துக் கொண்டிருக்கையில்,
அலைபேசி முகமொளிர, நானும் அதைத்தொடர 
திரையில் ஒளிர்கிறது அந்தப்பெயர்! 
வெற்றுத்தாள் வெறுமையால் வழிகிறது! 

10.3.12

வண்ண உலகும் வண்ணமிலா உலகும்


பிடித்த அந்த இசையை எங்கே கேட்டாலும்
இப்போதெல்லாம் ஒரு வெறுப்பு ஊற்றெடுக்கிறது
இம்முறையும், நிறுத்திவிடவேண்டுமென்று 
அரைநினைவிலும் தன்னிச்சையாக ஸ்நூஸ் செய்யப்படுகிறது
காலைநேர கைப்பேசி அலாரம்!

மீண்டும் அந்த வண்ணமிலா உலகத்தின் 
கல்லூரிக் கலைவிழாவில் ஒரு டிராகனுடன் பாரதியின் பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்த பாலே நடனத்தைத் தொடரலாம் எனும்போது
முந்தைய நாளில் வலிதந்த அந்தப் பச்சைத்துரோகமோ  
அது குறித்த வலியோ ,
தொலைந்து போன பொருளொன்றின் நினைவோ 
எதுவோ பிரவாகிக்க 
டிராகன் தன் சாந்த சொரூபத்தைக் கலைத்து நெருப்பைக் கக்குகிறது! 

அந்த சமயத்தில் மீண்டுமொரு முறை அதே இசை,
இம்முறை வெறுப்போன்றும் தீவிரமில்லை...
கண்முன்னிருக்கும் வண்ண உலகை அடுத்த 16 மணிநேரத்திற்கு 
எதிர்கொள்ள வேண்டுமென்பதைத் தவிர!