16.6.12

கூடு

நீண்ட நாளைக்குப் பிறகான
சந்திப்பில் நம்மிருவருக்குப்
புதிதல்லாத புல்வெளியில்
அமர்கிறோம்! புதிதாய்
முளைத்திருக்கிறது இடைவெளி!
பெயர் தெரியாத பறவையொன்று
தலைகளை உரசியபடி பறக்கிறது,
சருகொன்றைச் சுமந்தபடி!

மௌனங்கள் ஊடாட
பரஸ்பர விசாரிப்புகள்!
காற்று கிழிக்கப்படுகிறது,
இந்த முறை ஒரு குச்சி!

தயக்கங்களுக்குப்பின் நடுவில்
வந்துவிட்ட நிகழ்வுகள்,
மனிதர்களென ஆழ்ந்திருக்க,
கவனக்கலைப்பில், அலகைக்குத்தாத முள் ஒன்று!

பெருமூச்சுகளோடு சிலநினைவுகளை
அசைபோட்டு தன்னிச்சையாய் வெளிவந்த
கண்ணீர் மறைக்கத் திரும்புகையில்,
கொத்தாய்க் கொஞ்சம் நார்களோடு மீண்டுமவர்!

மணிகள் கொண்டாலும், மனம் கொள்ளாமல்,
கட்டாயமாய்க் கைபிடித்து எழுந்து
தூசிதட்டுகிறோம், நம் ஆடைகளையும்!
ஒரு கூடு கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது!!!

14.6.12

பார்வை

பலரைப் பார்க்கிறேன்!
சிலரை அன்போடு,
சிலரைப் பரிவோடும்
நட்போடும்..
வேறு சிலரை நம்பிக்கையோடு,
சில நேரங்களில் மரியாதையோடு!
ஒரு பார்வையின்போது மட்டும்
மூளை வேலைநிறுத்தம் செய்கிறது,
இதயம் அதிகமாய் இயங்குகிறது!
கருவிழிகள் பத்திரப் படுத்துகின்றன
உன் பிம்பத்தை!

13.6.12

அழகான தருணம்

பின்னோக்கி திருப்பப்படும் நாட்குறிப்பில்
விரியும் காட்சிகளுக்குள்
எப்படியோ புகுந்து விடுகிறது
இப்படி நடந்திருக்கலாம்!
இதைச் செய்திருக்கலாம்!
இப்படி இருந்திருக்கலாம்!
என்பதான அங்கலாய்ப்புகள்.
நீ தென்படும் காட்சிகள் மட்டும்
விதிவிலக்காய்..

அந்த தருணங்களை விட அழகாக
எந்த ஒரு தருணமும் இருக்க முடியாது!
அதே தருணம் உட்பட.

7.6.12

ஒரு பயணத்தின் கவிதை

தினசரி ஓடும்
கனரக வேகத்தில்
மறக்கப்பட்டோ
புறக்கணிக்கப்பட்டோ போகின்றன
கவிதைக்கான தருணங்கள்!

ஒரு பயணத்தின் விடியலில்,
பை நிரப்பும் படலத்தில்,
சகபயணியின் இருப்பில்,
தோழமை ஒன்றின் புரியா மௌனத்தில்,
மனம் கிளரும் ஒரு ஜன்னலோரக் காட்சியில்,
புரிதல் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பொன்றில்,
திணறிச் சிரித்த சிரிப்புகளில்,
முடிவின் பிரிவுக் கண்ணீரில்
என்றான எதிர்பாரா
தருணங்களில் தவிர்க்க முடியாது
வெளிப்பட்டு விடுகின்றன கவிதைகள்!

6.6.12

விளையாட்டு

வேண்டுமென்றோ கட்டாயத்திலோ
பாதியில் விடப்பட்ட ஆட்டத்தின்
சேதி சொல்கின்றன,
சுண்ணக்கட்டி தாயக்கட்டத்தின் மேலுள்ள
புளியங்கொட்டைக் காய்கள்..

புதிதாய் வாங்கிய இந்த வீட்டில்
இதற்கு முன் இருந்த முகம்தெரியா
குழந்தைகளின் நினைவில் நான்!
"இந்த வீட்ட இடிச்சிட்டு புதுசா பெரிய்யய
வீடு கட்டப்போறோமா அம்மா??"
என்றபடி வந்து என் காலைக் கட்டிக்கொள்ளும்
என் குழந்தையின் கையில் புதியதொரு
லூடோ போர்டும் நெகிழிக் காய்களும்!!!