8.6.13

காத்திருப்பு

நடையின் சத்தத்தைக் குறைக்க முயன்றபடி
உடையின் சுத்தத்தையும் சரிபார்த்துக்கொள்கிறேன்,
திறந்திருக்கும் கதவைத் தட்டுவதுகுறித்து
மனமொரு பட்டிமன்றம் நடத்துகிறது,
உள்ளிருப்பவர் பார்க்குமுன் அவசரமாய்
புன்னகையொன்றைப் பூசிக்கொள்கிறேன்!
பதிலுக்கொரு புன்னகையை எதிர்பார்த்தபடி
வாழ்த்தொன்றை உதிர்க்கிறேன்,
எதிரிலிருப்பவர் சிநேகப்புன்னகையும்
சரி செய்துவிட முடியவில்லை என் பதற்றத்தை!
அடுத்த இருபது நிமிடங்கள்
சற்று வேகமாய்த் தான் கடந்தன,
நன்றி ஒன்றைச் சொல்லிலும்
பார்வையிலும் செலுத்தி வெளியேறுகிறேன்.
கடந்த காலத்தின் கசப்புகளும்
இடை இடையே இனிமைகளும்
நினைவலைகளில் எழும்புகின்றன,
பயம் குறைந்து நம்பிக்கையும்
நம்பிக்கை குறைந்து பயமும்
மாறி மாறி ஊற்று எடுக்கின்றன!
வாசிப்பவர் வாயசைவை கவனித்தபடி அமர்ந்திருக்கிறேன்,
நேர்முகத்தேர்வில் தேறியவர் பெயர் பட்டியல் 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடித்த விதம் அருமை... தொடர வாழ்த்துக்கள்...

கீதமஞ்சரி said...

நேர்முகத்தேர்வில் படபடப்பூட்டும் தருணங்களையும் அதே உணர்வோடு கவிதையாய் பதிவு செய்தமை அருமை. பட்டியலில் உங்கள் பெயர் இருந்திருக்கவேண்டுமே...பாராட்டுகள்.

Post a Comment