14.6.13

மீண்டுமொரு பேருந்துப்பயணம்

நீ அடித்துப் பிடித்த அந்த
இருவருக்கான பேருந்து இருக்கையில்
தொந்தரவுகள் குறைந்த
ஜன்னலோரத்தை எனக்களித்து
மீதமுள்ள இடத்தில் அமர்கிறாய்
ஒரு பெருமூச்சுடன்!
ஜன்னல் கதவை
மூடிக் கொள்கிறோம்,
நமதாகிறது அவ்வுலகம்!
துப்பட்டாவைப் போர்த்திக்கொண்டு,
தலைமுடியைத் தூக்கி முடிகிறேன்
ஓய்வுக்கான ஏற்பாடு !
அயர்வும், நீ இருப்பதாலான பாதுகாப்பும்
சாய்க்கிறது என்னை, வசதியான உயரத்திலுள்ள
உன் தோள் மேல்!
விழிமூடுதலும் நித்திரையும்
சேர்ந்துகொண்டு விடுகின்றன விரைவில்,
நீ எப்போது உறங்கினாய் என்று
அறியும் விழிப்பில் இல்லை நான்!
நம் சாலையின் நெஞ்சுக்குழியில்
இறங்கிப்பார்க்கும் பேருந்தின் முயற்சியில்
ஆடிப்போய் எரிச்சலோடு விழிக்கிறேன்,
திறவாத கண்களுடன்
முட்டிக்கொள்கிறாய் முன்னிருக்கையின் பின்புறத்தில்,
அதற்கு முன்பே தன்னிச்சையாய்க்
கை வைத்திருக்கிறாய், என் தலை
முட்டிக்கொள்கிற வாய்ப்பிருக்கிற இடத்தில்!
அப்பா! இடித்துக்கொண்டது நீ தான்!
உறைக்கிறது எனக்கு!!!


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் பயணம் இனிக்க வைத்தது... வாழ்த்துக்கள்...

Post a Comment