27.3.14

புத்தாண்டின் முதல் வாரம்

விருப்பத் தேர்வுப் பட்டியலில்லாமல் 

தேதியிட வேண்டிய எல்லா இடங்களிலும்

அடித்துத் திருத்தப்படுகிறது

மறதியில் எழுதப்பட்ட முந்தைய வருடம்..

ஒவ்வொரு முறையும்

நாள்-கிழமை மாற்றிக்காட்டி

ஏமாற்றிவிடுகிறது இன்னும்

கழற்றப்படாத பழைய நாட்காட்டி.

ஏற்கனவே மூச்சுத்திணறத் தொடங்கிவிட்ட

புத்தாண்டு தீர்மானங்களைக்

கருணைக் கொலை செய்துவிட

மனசாட்சியுடன் போராட்டம்..

வழக்கம் போல இந்த ஆண்டும்

வந்திருக்கிற புத்தாண்டை

வழக்கம் போலவே நேரம் எடுத்துதான்

பழகிக்கொள்கிறது மனம்..

தினம் நடக்கும் இவ்வழியில்..

கண்ணை உறுத்தும் எழுத்துப்பிழையோடான
அறிவிப்புப்பலகை இருந்திருக்கக்கூடும்
இன்றைப்போல் அன்றும்!

வழியெங்கும் பார்வையால் துகிலுரியும் பாவி துச்சாதனர்கள் இருந்திருப்பார்கள்
இன்றைப்போல் அன்றும்!

வெள்ளை உடையணிந்த நேரம்பார்த்து சேற்றை மேலிறைத்தன மகிழுந்துகள்
இன்றைப்போல் அன்றும்!

ஆனாலும் வெறுப்பேற வழிநெடுகிலும் சாக்குகள் சிக்கியதில்லை,
இன்றைப்போல் அன்று!

வழித்துணை உந்தன் இடம் வெறுமை இன்று..