2.9.16

பேம்பரிங்

"அவ்வளவுதான் டார்லோ.. இதுக்கு மேல என்னால போராட முடியாது! முடிச்சுக்கலாம், உனக்கு நல்ல பொண்ணு அமையுவா.. ஆல் த பெஸ்ட்!" என்று சொல்லி அலைபேசியை அணைத்தாள். வலி, விரக்தி, சுதந்திரம் எல்லாம் சேர்ந்த ஏதோ ஒரு உணர்வு பெருமூச்சாக வெளிப்பட்டது. கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள். "இதெல்லாம் என்ன முடக்கிட கூடாது, எல்லாத்த விட என் சந்தோஷம் தான் முக்கியம், ப்ரேக் அப் ஆனா என்ன?! அதைத்தாண்டி வாழ்க்கை இல்லையா  என்ன? ஐ வில் பி மைசெல்ஃப்!" என்றாள் கண்ணாடியைப் பார்த்து. ஏதாவது ஜாலியாகச் செய்யவேண்டும் போலிருந்தது.

கௌதமை வரச்சொல்லி ஒரு டின்னர் போகலாம்! ஆறுதலாக இருக்கும். ஐயையோ, ப்ரேக் அப்பிற்குப் பிறகு ஆறுதல் சொல்லும் தோழனோடு உடனே உடன்பட்டுவிடும் எத்தனை லூசுகளைப் பார்த்திருக்கிறேன்! வேணாம் சாமி. இன்னும் கொஞ்சநாட்கள் "நோ பாய்ஸ் டே"க்களாகவே போகட்டும்.

"யெஸ்! ஐ நீட் சம் பேம்பரிங்.. அவனுக்குப் பிடிக்கும்னு தானே நீளமா முடி வளத்தேன்! அவனே இல்லனு ஆனப்ப பெரிய.. சூப்பர்.. ஒரு பார்லருக்குப் போய் முடிய வெட்டி புது ஹேர்ஸ்டைல் பண்ணுவோம்."

ட்ரேக்ஸ் போதும், ஒரு டீ ஷர்ட்டை எடுத்து மாட்டினாள். பர்ஸில் கார்ட் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். "எந்த பார்லர் போவது? தெருமுனையில் இருக்கும் பார்லரில் இருக்கும் பாஷை தெரியாத ஸ்டைலிஸ்ட்களுக்குக் கூட எங்கள் காதல் பாஷை தெரியும். போனால் அவனைப்பற்றி கண்டிப்பாக கேட்பார்கள். தேவையில்லாமல் எதற்கு?" அவள் டி ஷர்ட் "I'm a wanderess! I am free" என்றது. இலக்கில்லாமல் பயணித்தல் சுகம் என்று நினைத்தாள். வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியேறி பேருந்து நிலையத்தை அடைந்தாள். அடுத்து வருகிற எந்தப்பேருந்திலும் ஏறிவிடுவதாக முடிவு. ஏறிய பேருந்தில் ஸ்டேண்டிங். எட்டாத பேருந்துக் கம்பியைப் பார்த்து, தன்னிச்சையாக சப்போர்ட்டுக்கு அவன் கைகளைத் தேடின. "சே.. ஐ அம் இண்டிபெண்டெண்ட் " என்று வாய்விட்டே சொல்லிவிட்டாள்.

அடுத்த இரண்டு நிறுத்தங்கள் வாழ்வின் முரண்களை நினைத்தபடி கடக்கப்பட்டன. மூன்றாவது நிறுத்தத்தின் பக்கத்திலேயே அந்த அடர் ஊதா பெயர்ப்பலகை கண்ணில் பட்டது. கடைசி நிறுத்தத்திற்கு சீட்டு வாங்கி இங்கே எறங்குதே இந்தப் பொண்ணு என்று விசித்திரப் பார்வை பார்த்த நடத்துனரைத் தாண்டி இறங்கினாள்.

அந்த குப்பைக்காற்றும் கொஞ்சம் புத்துணர்வு தந்தது. புது ஏரியா என்று நினைத்தபடி அந்த பார்லருக்குள் நுழைந்தாள். உட்கார்ந்திருந்த ரிசப்ஷனிஸ்டுக்கு உதிர்த்த புன்னகைதான் கடந்த சில மாதங்களில் தன் முதல் புன்னகை என்று உணர்ந்த போது ஆச்சரியமாக இருந்தது.

"ஹே மீனா! எப்படி இருக்க? வாட் அ சர்ப்ரைஸ்!" சற்று பரிச்சயமான் குரல் தான். "என்னம்மா உன் ஆளு ட்ரேன்சர் ஆகி போய்ட்டா எங்கள லாம் மறந்துடுவியா? எப்படி இருக்காம் அவனுக்குப் புது ஊர்?! மிஸ் பண்றிங்களா மேடம்" என்றபடி பதில் எதிர்பாராமல் சிரித்தவள் சரண்யா, அவன் அலுவலகத் தோழி. சுதாரிப்பதற்குள் உள்ளிருந்து வந்த பெண்மணியிடம் "அம்மா! சொல்லியிருக்கேன் ல மீனா.." என்று அறிமுகப்படலம் தொடங்கினாள். புரியாமல் விழித்த அம்மாவிடம் "அதான்மா.. நம்ம கதிரோட ம்ம்" என்று கண்ணடித்தாள். உள்ளுக்குள் இருக்கும் எரிமலைக் குழம்பின் அறிகுறி ஏதும் தெரியாதபடிக்கு "ஹலோம்மா" உதிர்ந்தது.

அன்று அந்த பார்லரில் அந்த பேம்பரிங் தேவையில்லாமல் போனது

No comments:

Post a Comment