2.9.16

மாளிகை

என் தந்தை எனக்கென அமைத்திருக்கும் மாளிகையிது.. இயற்கை எழிலிலிருந்து என்னைப் பிரித்தடைத்திருக்கும் அலங்காரச் சிறை! இன்று சந்தையில் நான் கடந்த அந்த வியாபாரியைப் போல அனைவரிடமும் பேசி நினைத்ததைச் செய்யும் சுதந்திரம் கூட இல்லாத இடம், மாளிகையாம்!

என்னுடயை ஜீவன் காலாவதி அடைவதற்குள் மீண்டுமொரு முறையேனும் அந்நா அசையக் கேட்டிட வேண்டும். நாவென்றா சொன்னேன்! சதாகாலமும் என் மனத்திற்குள்  அரியணையிட்டு அரசாளும் திருநா அல்லவா அது. போர்க்களத்தில் மாற்றான் மார்பில் பாயும் அம்பின் கூர்மையோடு பாய்ந்து  என்னுள் ஊடுருவிய அந்த தீக்குரலைக் கேளாமலே போவேனோ!

என் மனம்கவர் கள்வனைக் கடந்தாலும் அவன் என்னிடம் பேசுவான் என்று என்ன நிச்சயம்? காவலர் யானையின் காலடியில் கூழாகும் பயத்தில் என்னிடம் பேசாமல் போனால்?  பயம் மீறிய ஆசையில்லாமலா அந்த காதல் கானத்தைக் குழலில் மீட்டினான்? எப்படியும் எனைத் தேடி வருவான். அவனிடமே கேட்டுவிடுவது உத்தமம். அந்தக் குழலிசையை எட்டியேனும் பிடிக்குமா இந்த யாழொலி.. மீட்டித்தான் பார்ப்போமே!

"யார் அங்கே?" தூணிற்குப்பின்னால் வந்து மறைந்திருக்கிறானோ அந்தக் கள்வன்! இத்தனை அரணை மீறி என் இருப்பிடம் கண்டிருக்கிறானே! முல்லை மலரொன்று முகிழும் நொடியின் மணமாய் என்னை ஆட்கொள்கிறதே இவன் இருப்பு.

"பதற்றம் வேண்டாம் இளவரசியாரே, நான்...."

"ஏய் கள்வனே, எப்படி என் அறைக்குள் நுழைந்தாய்? காவலர்கள் எங்கே? ஆதித்ய சோழனின் மகள் மாளிகைக்குள் இத்தனை சுலபமாக திருடன் நுழைந்துவிட முடியுமா?"

"உஷ்ஷ்.. சப்தம் எழுப்பாதீர்கள் இளவரசி. காவலர்கள் எல்லோரும் சித்திரைக் கூத்து களித்துக் கொண்டிருக்கிறார்கள்? பணிப்பெண்களும் கூட. பயம்கொள்ள தேவையில்லை. உங்களை பார்த்துவிட்டுப் போகத்தான் வந்தேன், எதையும் களவாடிப்போக இல்லை.."

"இன்று மாலை சந்தையில் உன் குரலை கேட்ட மாதிரி இருக்கிறதே. புல்லாங்குழல் விற்றுக்கொண்டிருந்தவன் தானே நீ? பேச்சில் வேடிக்கையும், அபரிமிதமான குறும்பும்.."

"நானே தான் இளவரசி, இந்த எளியோனை மறக்கமால் சிந்தையில் சேமித்திருப்பதற்கு கோடி வந்தனங்கள்."

"உம்மை மறக்கமுடியாமல் தானே யாழிசைத்துக் கொண்டிருந்தேன். உன்னைப் போன்றொதொரு வசீகரப் பேச்சாளனை இப்பட்டணத்தில் கேட்டதில்லை நான்."

"தன்யனானேன் இளவரசி. உங்களை தரிசிக்க வேண்டுமென்று உயிரை பணயம் வைத்து வந்தேன், சந்தித்தும் விட்டேன். விடைபெற்றுக் கொள்கிறேன்."

"என்னை தனியே விட்டுச் செல்லுவது எங்கனம் நியாயாம்? என்னையும் கூட்டிச் செல்லும்.."

"என்ன வார்த்தை பகர்ந்தீர்கள் இளவரசி? உங்கள் பாதம் இளைப்பாற சிரமாய் இருப்பேன்.. இருப்பினும் அச்சமாக..."

"ஏன் பயம்? என் தகப்பனாரை நினைத்து அஞ்சுகிறாயா? எத்தனை காலத்துக்குத்தான் இந்த வரையப்பட்ட கோடுகளுக்குள் கட்டுப்பட்டு கிடப்பது! என்னுடைய தேவையெல்லாம் கொஞ்சம் சுதந்திரம், கொஞ்சம் தனிமை, கொஞ்சம் சுயநலமில்லாத அன்பு.."

"நீங்கள் சொல்வது சரியாக விளங்கவில்லை.."

"எனக்கு வெளியுலகில் சஞ்சரிக்க வேண்டும்; கானகத்தில் சுற்றித்திரிய வேண்டும்; வண்ணத்துப்பூச்சிகளிடம் உரையாடவேண்டும்; மான்களின் மேலேயுள்ள புள்ளிகளை தொட்டுப்பார்க்க வேண்டும்; காட்டுமர வேர்களில் படுத்துறங்க வேண்டும்; எனக்குள் சூழ்ந்திருக்கும் இருளை மொத்தமாக விரயம் செய்யவேண்டும்.. சிவபெருமானின் கருணைமின்மையால் இவைற்றையெல்லாம் பார்க்கத்தான் எனக்கு கொடுப்பினையில்லை.. குறைந்தபட்சம் உணர்தலாவது வேண்டும்.."

"இளவரசி.. குழப்புகிறீர்கள்.."

"ஆம். எனக்கு கண் பார்வை கிடையாது.. நானொரு பிறவிக் குருடு!"

1 comment:

thirunavukarasu said...
This comment has been removed by the author.

Post a Comment