23.9.16

தெளிவான நான்

உன் முன்னாள் காதலியின்
கதையேதோ தூக்கம் மிஞ்சிய 
பின்னிரவில் உதிர்க்கிறாய்..
அவள் அலைபேசியின் கடைசி நான்கு எண்கள்
மறந்துபோனது சுகதுக்கத்தின்
கலவையாகிறது உனக்கு!
தெளிவான பெண்ணொருத்தி
உனக்கு வாய்ப்பாளென்று அவள்
வாழ்த்தியதாய்ச் சொன்னாய்..
இவ்வளவும் பேசியதில் எனக்கேதும்
வருத்தமா என்று வினவுகிறாய்...
வருத்தமென்ன வருத்தம்!
கொஞ்சம் தன்னிலை உணர்தலும்,
முகம் பார்த்திராத அந்த பெண்ணுக்கு
கொஞ்சம் பரிதாபமும் மட்டுமே!
இன்று தெளிவான நான் 
என்றோ  எங்கோ உதிர்த்த வாழ்த்தின் நினைவில்..

2.9.16

அன்பு மொழி

காதலர் தினம், பிறந்தநாள், முதன்முதலில் சந்தித்த நாள் என்று பார்த்துப் பார்த்து கிஃப்ட் வாங்கிக் கொடுத்து, எக்கச்செக்க ரியாக்‌ஷன் எதிர்பார்த்து, ஒவ்வொரு முறையும் பல்பு வாங்குபவரா நீங்கள்?

"நீ கடைசியா எப்போ I love you சொன்னே ஞாபகம் இருக்கா?" என்ற கேள்வியில் சிக்கி சின்னாபின்னமான அனுபவம் உண்டா?

நீங்கள் தனியரில்லை :D நாம் கூட்டத்தோடு தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது.. "அன்பு மொழிகள்" எனும் கருத்தியல்.

ஒவ்வொரு மனிதரும் தன் பிரியத்தை வெவ்வேறு வழியாக வெளிப்படுத்துகிறார். பொதுவாக அவற்றை ஐந்து வகைப்படுத்தியிருக்கிறார் Gary D Chapman. பரிசுப்பொருட்கள் அளித்தல், உடன் நேரம் செலவிடுதல், அன்புறுதியான சொற்களைப் பேசுதல், சேவை செய்தல், ஸ்பரிசம் என இந்த ஐந்தில் ஏதேனும் இரண்டை நாம் ஒவ்வொருவரும் அன்பு வெளிப்பாட்டு மொழிகளாகக் கொள்கிறோம். நம்மவர் எந்த மொழிவாயிலாக அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ அவ்வழியில்தான் பெரும்பாலும் நாம் நம் அன்பை வெளிப்படுத்துகிறோம்.

ஸ்பரிச வெளிப்பாட்டை எதிர்பார்க்கும் உங்களவருக்கு எந்தப்பரிசுப் பொருளையும் விட உங்கள் ஒரு முத்தம் நிறைவளிக்கலாம். எதிர்பார்க்கும் வடிவத்தில் அன்பை வெளிப்படுத்துவதில் தான் இருக்கிறது மேஜிக் :)

இப்படியெல்லாம் காதலை வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டுமா? தொடர்ந்து அன்புமழை பொழிய வேண்டுமா என்ன? வயதாகிறது, வேறு வேலை இருக்கிறது என்றெல்லாம் பேசுகிறவர்களுக்கு..  நீர் ஊற்றாத செடியாக உங்கள் உறவை வாட விடாதீர்கள் :) அவ்வப்போது அன்பு மொழிகளால் உங்கள் உறவுக்கு!

பேம்பரிங்

"அவ்வளவுதான் டார்லோ.. இதுக்கு மேல என்னால போராட முடியாது! முடிச்சுக்கலாம், உனக்கு நல்ல பொண்ணு அமையுவா.. ஆல் த பெஸ்ட்!" என்று சொல்லி அலைபேசியை அணைத்தாள். வலி, விரக்தி, சுதந்திரம் எல்லாம் சேர்ந்த ஏதோ ஒரு உணர்வு பெருமூச்சாக வெளிப்பட்டது. கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள். "இதெல்லாம் என்ன முடக்கிட கூடாது, எல்லாத்த விட என் சந்தோஷம் தான் முக்கியம், ப்ரேக் அப் ஆனா என்ன?! அதைத்தாண்டி வாழ்க்கை இல்லையா  என்ன? ஐ வில் பி மைசெல்ஃப்!" என்றாள் கண்ணாடியைப் பார்த்து. ஏதாவது ஜாலியாகச் செய்யவேண்டும் போலிருந்தது.

கௌதமை வரச்சொல்லி ஒரு டின்னர் போகலாம்! ஆறுதலாக இருக்கும். ஐயையோ, ப்ரேக் அப்பிற்குப் பிறகு ஆறுதல் சொல்லும் தோழனோடு உடனே உடன்பட்டுவிடும் எத்தனை லூசுகளைப் பார்த்திருக்கிறேன்! வேணாம் சாமி. இன்னும் கொஞ்சநாட்கள் "நோ பாய்ஸ் டே"க்களாகவே போகட்டும்.

"யெஸ்! ஐ நீட் சம் பேம்பரிங்.. அவனுக்குப் பிடிக்கும்னு தானே நீளமா முடி வளத்தேன்! அவனே இல்லனு ஆனப்ப பெரிய.. சூப்பர்.. ஒரு பார்லருக்குப் போய் முடிய வெட்டி புது ஹேர்ஸ்டைல் பண்ணுவோம்."

ட்ரேக்ஸ் போதும், ஒரு டீ ஷர்ட்டை எடுத்து மாட்டினாள். பர்ஸில் கார்ட் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். "எந்த பார்லர் போவது? தெருமுனையில் இருக்கும் பார்லரில் இருக்கும் பாஷை தெரியாத ஸ்டைலிஸ்ட்களுக்குக் கூட எங்கள் காதல் பாஷை தெரியும். போனால் அவனைப்பற்றி கண்டிப்பாக கேட்பார்கள். தேவையில்லாமல் எதற்கு?" அவள் டி ஷர்ட் "I'm a wanderess! I am free" என்றது. இலக்கில்லாமல் பயணித்தல் சுகம் என்று நினைத்தாள். வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியேறி பேருந்து நிலையத்தை அடைந்தாள். அடுத்து வருகிற எந்தப்பேருந்திலும் ஏறிவிடுவதாக முடிவு. ஏறிய பேருந்தில் ஸ்டேண்டிங். எட்டாத பேருந்துக் கம்பியைப் பார்த்து, தன்னிச்சையாக சப்போர்ட்டுக்கு அவன் கைகளைத் தேடின. "சே.. ஐ அம் இண்டிபெண்டெண்ட் " என்று வாய்விட்டே சொல்லிவிட்டாள்.

அடுத்த இரண்டு நிறுத்தங்கள் வாழ்வின் முரண்களை நினைத்தபடி கடக்கப்பட்டன. மூன்றாவது நிறுத்தத்தின் பக்கத்திலேயே அந்த அடர் ஊதா பெயர்ப்பலகை கண்ணில் பட்டது. கடைசி நிறுத்தத்திற்கு சீட்டு வாங்கி இங்கே எறங்குதே இந்தப் பொண்ணு என்று விசித்திரப் பார்வை பார்த்த நடத்துனரைத் தாண்டி இறங்கினாள்.

அந்த குப்பைக்காற்றும் கொஞ்சம் புத்துணர்வு தந்தது. புது ஏரியா என்று நினைத்தபடி அந்த பார்லருக்குள் நுழைந்தாள். உட்கார்ந்திருந்த ரிசப்ஷனிஸ்டுக்கு உதிர்த்த புன்னகைதான் கடந்த சில மாதங்களில் தன் முதல் புன்னகை என்று உணர்ந்த போது ஆச்சரியமாக இருந்தது.

"ஹே மீனா! எப்படி இருக்க? வாட் அ சர்ப்ரைஸ்!" சற்று பரிச்சயமான் குரல் தான். "என்னம்மா உன் ஆளு ட்ரேன்சர் ஆகி போய்ட்டா எங்கள லாம் மறந்துடுவியா? எப்படி இருக்காம் அவனுக்குப் புது ஊர்?! மிஸ் பண்றிங்களா மேடம்" என்றபடி பதில் எதிர்பாராமல் சிரித்தவள் சரண்யா, அவன் அலுவலகத் தோழி. சுதாரிப்பதற்குள் உள்ளிருந்து வந்த பெண்மணியிடம் "அம்மா! சொல்லியிருக்கேன் ல மீனா.." என்று அறிமுகப்படலம் தொடங்கினாள். புரியாமல் விழித்த அம்மாவிடம் "அதான்மா.. நம்ம கதிரோட ம்ம்" என்று கண்ணடித்தாள். உள்ளுக்குள் இருக்கும் எரிமலைக் குழம்பின் அறிகுறி ஏதும் தெரியாதபடிக்கு "ஹலோம்மா" உதிர்ந்தது.

அன்று அந்த பார்லரில் அந்த பேம்பரிங் தேவையில்லாமல் போனது

உன்னால் விளைகிற எல்லாம் சுகமே!

உண்மை வந்து உரசிப் போகையில்
உதிர்ந்து விழுகின்றன பொய்களின் தடங்கள்!
உன் நேசம் கொஞ்சம் தடவிச்செய்கையில்
உயிர்த்துத் துளிர்க்கிறது என் உயிரின் சுவாசம்!
அலங்காரத் தோரணங்கள் வாயிலுக்குத்தான்,
உயிரின் உட்புறம் எளிமைதான் போலும்..
கவிதையோ கண்ணீரோ 
உன்னால் விளைகிற எல்லாம் சுகமே!

Frequency illusion

ஒரு புது வார்த்தையோ, பெயரோ, ஒரு நபரைப் பற்றியோ நாம் அண்மையில் அறிந்திருப்போம். எடுத்துக்காட்டாக ஒரு புதிய சொல் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த சில நாட்களில் எதேச்சையாக நாம் படிக்கும் ஒரு வார இதழில், வகுப்பெடுக்கும் வாத்தியாரின் பேச்சில், ஒரு வலைப்பக்கத்தின் முகப்பில் என்று மீண்டும் மீண்டும் அந்த சொல்லைக் கடக்க நேரிடும்! "அட இது என்ன மாயம்" என்று வியந்திருக்கிறேன்.. நிஜமாகவே மாயை என்று தான் பெயரிட்டிருக்கிறார்கள்.. "Frequency illusions" என்று அதற்குப் பெயராம்.. இந்த பெயர் வருவதற்கு சில வருடங்கள் முன்னாடியே "Baader-Meinhof Phenomenon" என்ற பெயரால் அழைக்கப்பட்டது போல..  அதற்கான காரணம் பொதுவா யோசிச்சாலே புரியற ஒன்னு தான். ஆனாலும்
மனித மூளை எவ்வளவு விசித்திரமானது! :)

அப்பா

உணவகம் நிறுத்தப்படும் பேருந்தின்
கடைசி படிக்கட்டில்
இறங்கிப்போன அப்பா திரும்புவதற்கு ஒற்றைக்கால் தவம் புரியும்
பட்டுப்பாவாடைச் சிறுமியின்
பதபதைப்பில் 15 ஆண்டுகள்
பின்னோக்கி வளர்ந்துவிடுவதைத்
தவிர்க்க முடிவதே இல்லை :)

அப்பா வாங்கித்தந்த பிஸ்கட்டின்
சுவையும் பின்னணி கானாப்பாடலும்
பரிதவிப்புமாக திரும்பிப்பார்க்கிறேன்
அப்பா வருவாரா என்று! :)

பேய்

"பாரேன், இந்த ஜுரம் என்ன விட்டுப் போகவே மாட்டேங்குது!"
"என்னை மாதிரியே.. இல்ல? ;)"
"நீ நோய் இல்ல மா, பேய்!"
"ஹா அது ஏன்?"
"நோய் ஒருத்தனுக்குள்ள புகுந்து அவனக் கொன்னுட்டு தானும் அழிஞ்சிடும்.. ஆனா பேய் ஒருத்தனுக்குள்ள புகுந்து அவன அழிச்சிட்டு ஜாலியா சுத்தும்! பேய் தான் நீ :D"
"அட! இப்படி எல்லாம் உவமை எங்க கிடைக்குது உனக்கு?"
"கம்பன் கிட்ட தான் கடன் வாங்கினேன் :) "

வாய்ப்பு

முகப்பூச்சின் வண்ணம்போல்
லேசாய் விஷம் தடவி,
உன் கர்வம் கொன்ற கூர்வாள்..

ஜீவன் காலாவதி ஆவதற்குள்
மீண்டுமொரு தரிசனம்
நீ விரும்பிய சித்திரங்கள்..

கரிய ஓவியமொன்றின் பாற்குளம்,
அதில் மிதந்திடும் கோலிகுண்டு..

நீர் பரந்திருக்கும் குளத்தின்மேல்
விழுந்த நீர்த்துளியென
உன் தேகம் தழுவிய தண்மை..

உயிர் பிரிந்தாலும் உன்னைத்தழுவிச் செல்ல
உன் செல்ல விழிகளுக்கொரு வாய்ப்பு கொடு :)
தானம் செய் அன்பே என் விழிகளை! 

மாளிகை

என் தந்தை எனக்கென அமைத்திருக்கும் மாளிகையிது.. இயற்கை எழிலிலிருந்து என்னைப் பிரித்தடைத்திருக்கும் அலங்காரச் சிறை! இன்று சந்தையில் நான் கடந்த அந்த வியாபாரியைப் போல அனைவரிடமும் பேசி நினைத்ததைச் செய்யும் சுதந்திரம் கூட இல்லாத இடம், மாளிகையாம்!

என்னுடயை ஜீவன் காலாவதி அடைவதற்குள் மீண்டுமொரு முறையேனும் அந்நா அசையக் கேட்டிட வேண்டும். நாவென்றா சொன்னேன்! சதாகாலமும் என் மனத்திற்குள்  அரியணையிட்டு அரசாளும் திருநா அல்லவா அது. போர்க்களத்தில் மாற்றான் மார்பில் பாயும் அம்பின் கூர்மையோடு பாய்ந்து  என்னுள் ஊடுருவிய அந்த தீக்குரலைக் கேளாமலே போவேனோ!

என் மனம்கவர் கள்வனைக் கடந்தாலும் அவன் என்னிடம் பேசுவான் என்று என்ன நிச்சயம்? காவலர் யானையின் காலடியில் கூழாகும் பயத்தில் என்னிடம் பேசாமல் போனால்?  பயம் மீறிய ஆசையில்லாமலா அந்த காதல் கானத்தைக் குழலில் மீட்டினான்? எப்படியும் எனைத் தேடி வருவான். அவனிடமே கேட்டுவிடுவது உத்தமம். அந்தக் குழலிசையை எட்டியேனும் பிடிக்குமா இந்த யாழொலி.. மீட்டித்தான் பார்ப்போமே!

"யார் அங்கே?" தூணிற்குப்பின்னால் வந்து மறைந்திருக்கிறானோ அந்தக் கள்வன்! இத்தனை அரணை மீறி என் இருப்பிடம் கண்டிருக்கிறானே! முல்லை மலரொன்று முகிழும் நொடியின் மணமாய் என்னை ஆட்கொள்கிறதே இவன் இருப்பு.

"பதற்றம் வேண்டாம் இளவரசியாரே, நான்...."

"ஏய் கள்வனே, எப்படி என் அறைக்குள் நுழைந்தாய்? காவலர்கள் எங்கே? ஆதித்ய சோழனின் மகள் மாளிகைக்குள் இத்தனை சுலபமாக திருடன் நுழைந்துவிட முடியுமா?"

"உஷ்ஷ்.. சப்தம் எழுப்பாதீர்கள் இளவரசி. காவலர்கள் எல்லோரும் சித்திரைக் கூத்து களித்துக் கொண்டிருக்கிறார்கள்? பணிப்பெண்களும் கூட. பயம்கொள்ள தேவையில்லை. உங்களை பார்த்துவிட்டுப் போகத்தான் வந்தேன், எதையும் களவாடிப்போக இல்லை.."

"இன்று மாலை சந்தையில் உன் குரலை கேட்ட மாதிரி இருக்கிறதே. புல்லாங்குழல் விற்றுக்கொண்டிருந்தவன் தானே நீ? பேச்சில் வேடிக்கையும், அபரிமிதமான குறும்பும்.."

"நானே தான் இளவரசி, இந்த எளியோனை மறக்கமால் சிந்தையில் சேமித்திருப்பதற்கு கோடி வந்தனங்கள்."

"உம்மை மறக்கமுடியாமல் தானே யாழிசைத்துக் கொண்டிருந்தேன். உன்னைப் போன்றொதொரு வசீகரப் பேச்சாளனை இப்பட்டணத்தில் கேட்டதில்லை நான்."

"தன்யனானேன் இளவரசி. உங்களை தரிசிக்க வேண்டுமென்று உயிரை பணயம் வைத்து வந்தேன், சந்தித்தும் விட்டேன். விடைபெற்றுக் கொள்கிறேன்."

"என்னை தனியே விட்டுச் செல்லுவது எங்கனம் நியாயாம்? என்னையும் கூட்டிச் செல்லும்.."

"என்ன வார்த்தை பகர்ந்தீர்கள் இளவரசி? உங்கள் பாதம் இளைப்பாற சிரமாய் இருப்பேன்.. இருப்பினும் அச்சமாக..."

"ஏன் பயம்? என் தகப்பனாரை நினைத்து அஞ்சுகிறாயா? எத்தனை காலத்துக்குத்தான் இந்த வரையப்பட்ட கோடுகளுக்குள் கட்டுப்பட்டு கிடப்பது! என்னுடைய தேவையெல்லாம் கொஞ்சம் சுதந்திரம், கொஞ்சம் தனிமை, கொஞ்சம் சுயநலமில்லாத அன்பு.."

"நீங்கள் சொல்வது சரியாக விளங்கவில்லை.."

"எனக்கு வெளியுலகில் சஞ்சரிக்க வேண்டும்; கானகத்தில் சுற்றித்திரிய வேண்டும்; வண்ணத்துப்பூச்சிகளிடம் உரையாடவேண்டும்; மான்களின் மேலேயுள்ள புள்ளிகளை தொட்டுப்பார்க்க வேண்டும்; காட்டுமர வேர்களில் படுத்துறங்க வேண்டும்; எனக்குள் சூழ்ந்திருக்கும் இருளை மொத்தமாக விரயம் செய்யவேண்டும்.. சிவபெருமானின் கருணைமின்மையால் இவைற்றையெல்லாம் பார்க்கத்தான் எனக்கு கொடுப்பினையில்லை.. குறைந்தபட்சம் உணர்தலாவது வேண்டும்.."

"இளவரசி.. குழப்புகிறீர்கள்.."

"ஆம். எனக்கு கண் பார்வை கிடையாது.. நானொரு பிறவிக் குருடு!"

பிக்மேலியன்

நீ காணும் நானும் நானோ?
சித்திரம் உள்வாங்கி உருமாற்றும்
விசித்திரக் கண்ணாடி நீயோ?
உன் மனபிம்பம் கண்டு என்னை
விரும்பும் நார்ஸிசஸ் நானோ?
செய்த சிலையின்மேல் காதல்
உயிர்க்கும் பிக்மேலியன் நீயோ?
கதைசொல்லிகள் தவிரவிட்ட
அழகுக் காதல் நாமோ!

ஆனந்தம்

ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருக்கும் பேருந்திலிருந்து இறங்கி எங்கே செல்வதென்று முடிவெடுக்காமல் பத்து நிமிடம் செலவழிக்க நேர்ந்தது :) சாலையைக் கடப்பதற்காக மட்டும் 10 நிமிடம் முன்னதாகக் கிளம்ப வேண்டியிருக்கிற சாலை, செவித்திறன் இழப்பேனோ என்ற பயம் ஏற்படுமளவு இரைச்சல். இறங்கியது சாலை ஓர நடைபாதை, அதிசயமாக சுத்தமாய் இருந்தது! நீண்ட மதில் சுவர் ஒரு இடுகாட்டினுடையது.. அதன் மதிலையொட்டி வைக்கப்பட்டு இருக்கும் கிறிஸ்து வழக்கத்திற்கும் அதிக கருணை சுரக்கும் முகம் கொண்டிருந்தார் :) என் ஒருபக்கம் நடக்கும் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்து மறுபக்கம் நிலவும் அமைதி சிரிப்பது போலிருந்தது! நோக்கமற்ற அந்த உலாவலும் தடைகளற்ற மன ஓட்டமும் :) ஆனந்தம்!