16.6.12

கூடு

நீண்ட நாளைக்குப் பிறகான
சந்திப்பில் நம்மிருவருக்குப்
புதிதல்லாத புல்வெளியில்
அமர்கிறோம்! புதிதாய்
முளைத்திருக்கிறது இடைவெளி!
பெயர் தெரியாத பறவையொன்று
தலைகளை உரசியபடி பறக்கிறது,
சருகொன்றைச் சுமந்தபடி!

மௌனங்கள் ஊடாட
பரஸ்பர விசாரிப்புகள்!
காற்று கிழிக்கப்படுகிறது,
இந்த முறை ஒரு குச்சி!

தயக்கங்களுக்குப்பின் நடுவில்
வந்துவிட்ட நிகழ்வுகள்,
மனிதர்களென ஆழ்ந்திருக்க,
கவனக்கலைப்பில், அலகைக்குத்தாத முள் ஒன்று!

பெருமூச்சுகளோடு சிலநினைவுகளை
அசைபோட்டு தன்னிச்சையாய் வெளிவந்த
கண்ணீர் மறைக்கத் திரும்புகையில்,
கொத்தாய்க் கொஞ்சம் நார்களோடு மீண்டுமவர்!

மணிகள் கொண்டாலும், மனம் கொள்ளாமல்,
கட்டாயமாய்க் கைபிடித்து எழுந்து
தூசிதட்டுகிறோம், நம் ஆடைகளையும்!
ஒரு கூடு கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது!!!

2 comments:

விச்சு said...

//காற்று கிழிக்கப்படுகிறது,
இந்த முறை ஒரு குச்சி!// அழகான வரிகள்.

அருணன் கோபால் said...

அருமையான வரிகள் !!! பிரிவின் பின் சந்திக்கும் இருவரின் மனவெளியை இடைவெளியில்லாமல் கூறிவிட்டீர்கள் !!!

Post a Comment