13.9.23

இதழின் பயணம்

 


உன் மூக்கெலும்பில் தலைகீழாய்

ஏறியேறி உச்சம் தொட்டு

உன்மத்ததில் கீழே குதிக்க

அடைந்தது ஒரு தீயருவி


தெவிட்டாத தித்திப்புத்தீ தகிக்க 

கன்னக்குழி திசைமாறாது 

தத்தித்தத்தி பள்ளத்தாக்கு இறங்கியேறி

சேர்ந்ததுன் முக முகடு


உன் கழுத்துப்படி இறங்கிவந்து

புகலிடம் தேடித்தேடி,

காறை எலும்புகள் சறுக்கியேறி

வரைந்தது ஒரு முக்கோணப்பாறை


சோர்ந்துவிடாமல் அந்த

முனை தாண்டி

பெருமூச்சுப்புயல் தாங்க

பற்றி நின்றதுன் விலாக்காடு


இனியிந்தப் பயணத்திசைக்கு

வாழ்த்து சொல்லி 

தனிமை வழிகொடுக்கிறது

இடையினுடை!


மரமான கூடு

கூடு கட்டினோம்

கல்லும் மண்ணும்

சுள்ளியாய் சருகாய் வைத்து

கூடுதான் கட்டினோம்!


ஓர் ஊஞ்சலும்

ஓர் அடுப்பும்

சில தலையணைகளும்

இட்டு வைத்தோம்.


இரு மனங்களும்

நான்கு செவிகளும்

ஒரு கதவும்

திறந்து வைத்தோம்.


ஒரு நம்பிக்கையும்

இரு அன்புள்ளங்களும்

சில கனவுகளும்

விதைத்து வைத்தோம்


கூடாய்த்தான் இருந்தது

வந்த

ஒரு நட்பின் ஆனந்தக் கண்ணீரில்,

ஒரு உறவின் அக்கறைக் கண்ணீரில்,

ஒரு சுற்றத்தின் அழுகைக்கண்ணீரில்,

சிலரின் ஆறுதல் பெருமூச்சுக் காற்றில்,

பலரின் ஆசுவாசப் பெருமூச்சுக் காற்றில்,

சிலரின் அமைதிப் பெருமூச்சுக் காற்றில்,

சில தோல்விகளின் உரத்தில்,

பல ஏமாற்ற ரகசியங்களின் எருவில்,

சொல்லிய சொல்லாத வலிகள் உரத்தில்,

ஒவ்வொரு சுள்ளியும்

ஒவ்வொரு சருகும்

ஒவ்வொரு விதையும்

முளைத்து வேர்விடத்தொடங்கின...


மரமாகி பூத்துக் குலுங்குகிறது கூடு!