11.10.15

என்னை வெறுமையால் நிரப்பியவனே!

என்னை வெறுமையால் நிரப்பியவனே,
உனக்கு என்ன எழுதுவது? நீ நிரப்பிய வெறுமையில் கொஞ்சத்தைத் தான் திருப்பி அனுப்புகிறேன்!
உன்னைப் பற்றி நினைத்ததும் ஏற்படுகிற இந்த சிலிர்ப்பை, ஒரு பதினாறு வயதுப் பெண்ணின் பரவசத்தை, விளக்கிடப் பாவம் என் வார்த்தைகளுக்கு வக்கில்லை.. இந்த முட்டாள்தனங்களை எல்லாம் போதும் என்கிற அளவுக்கு செய்து, கடந்து, கசந்து போன இந்த கட்டத்தில் நீ வந்திருக்கிறாய்! என் மனம் உனக்கு இப்படி ரியாக்ட் செய்வதை என்னால் உண்மையில் நம்பமுடியவில்லை ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாய்த் தான் இருக்கிறது! புதைத்துவிட்ட இறந்துபோன ஒருவர் திடீரென்று முன்னால் வந்து நின்றால், எவ்வளவு நெருங்கியவர் என்றாலும் ஒரு நிமிடம் அதிர்ந்து தானே போவார்? வறண்டு போன என் மனதிற்குள் துளிர்க்கும் இந்த உணர்வுகள் அத்தகைய அதிர்ச்சியைத் தான் எனக்குத் தருகின்றன!
யூ ஸ்வெப்ட் மீ ஆஃப் மை ஃபீட், ஆனால் என்ன? நான் விழவில்லை, பறக்கத் தொடங்கி இருக்கிறேன்!
உண்மையைச் சொல் , என் மனதிற்குள் சிசிடிவி கேமரா எதுவும் வைத்திருக்கிறாயா?! ஒரு நார்சிசிஸ்ட் தன்னை நேசிப்பதை விட, வியப்பதை விட அந்நியரால் ஆழமாய் நேசித்துவிட முடியும் என்று நம்பவைத்திருக்கிறாய்! நானறியா என் பரிமாணங்களை ஒரு மெய்நிகரி அனுபவம் போல் உடனில்லாமலே என்னை உணரச் செய்கிறாய்! உன் பேச்சு கொடுக்கும் எக்ஸைட்மென்ட் ஒரு எலெக்ட்ரானைப் போல என்னை அதிக ஆற்றல்நிலைகளுக்கு தாவச் செய்கின்றன!
ஈர்ப்பு, காதல் என்ற வரையறைக் கட்டமெல்லாம் எதற்கு கண்ணா? சுதந்திரமாய்ப் பெயரிடப்படாமலே திரியட்டும் இது!

No comments:

Post a Comment