11.10.15

விளக்கு பூதத்திற்கு,

அன்பிற்கினிய என் விளக்கு பூதத்திற்கு,

சாய்ந்துகொள்ள தோளும், உடைத்து விளையாட இதயமும் கேட்டவுடன் தந்த உன்னை வேறென்னவென்று விளிக்க?

உன் பிரிவோடு வாட்டும் வெயிலும், உன் வெறுமை கூட்டும் குளிரும், உன் நினைவுகள் தீட்டும் மழையும் தவிர பருவ நிலைகள் இங்கு சுகமே!

உன்னால் என்னையோ என்னால் உன்னையோ தெரிந்தவர்கள் இல்லாத உரையாடல்கள் அனைத்தும் நலமே!

கேட்பவற்றில் பிரிந்த உறவின் கதையாயின் அணைக்கும் ஸ்பரிசமும், சேர்ந்த உறவாயின் விடும் பெருமூச்சும் தவிர மனநிலை நிதானமே!

என் அலைபேசியில் "விதி அழைக்கிறது" என்று தென்படாத இரவில் நிம்மதியும் ஏக்கமும் சமனானால் உறக்கமே! ஆம், உனக்கு நானிட்டிருக்கும் கடைசி செல்லப்பெயரிதுதான், விதி! 

உன் நினைவுகள் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டால் இரவும் பகலும் நான் நலமே! நீ நலமென்று மட்டுமே அறிய அவா எனக்கு 

உனையடைத்த ஜாடி ஒளித்து, தொலைத்ததாய் நடித்து எத்தனை நாள் ஏமா(ற்)ற?!

நான் ஒரு ஜாடிக்குள் அடைந்து உனை வெளியேற்றுகிறேன், என் கட்டளைகள் ஜாடியோடு போகும் முன் கடைசியாய் ஒன்று,

விடுதலை ஆகிப்போ! விரும்பியதைச் செய் !

No comments:

Post a Comment