11.10.15

விளக்கு பூதத்திற்கு,

அன்பிற்கினிய என் விளக்கு பூதத்திற்கு,

சாய்ந்துகொள்ள தோளும், உடைத்து விளையாட இதயமும் கேட்டவுடன் தந்த உன்னை வேறென்னவென்று விளிக்க?

உன் பிரிவோடு வாட்டும் வெயிலும், உன் வெறுமை கூட்டும் குளிரும், உன் நினைவுகள் தீட்டும் மழையும் தவிர பருவ நிலைகள் இங்கு சுகமே!

உன்னால் என்னையோ என்னால் உன்னையோ தெரிந்தவர்கள் இல்லாத உரையாடல்கள் அனைத்தும் நலமே!

கேட்பவற்றில் பிரிந்த உறவின் கதையாயின் அணைக்கும் ஸ்பரிசமும், சேர்ந்த உறவாயின் விடும் பெருமூச்சும் தவிர மனநிலை நிதானமே!

என் அலைபேசியில் "விதி அழைக்கிறது" என்று தென்படாத இரவில் நிம்மதியும் ஏக்கமும் சமனானால் உறக்கமே! ஆம், உனக்கு நானிட்டிருக்கும் கடைசி செல்லப்பெயரிதுதான், விதி! 

உன் நினைவுகள் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டால் இரவும் பகலும் நான் நலமே! நீ நலமென்று மட்டுமே அறிய அவா எனக்கு 

உனையடைத்த ஜாடி ஒளித்து, தொலைத்ததாய் நடித்து எத்தனை நாள் ஏமா(ற்)ற?!

நான் ஒரு ஜாடிக்குள் அடைந்து உனை வெளியேற்றுகிறேன், என் கட்டளைகள் ஜாடியோடு போகும் முன் கடைசியாய் ஒன்று,

விடுதலை ஆகிப்போ! விரும்பியதைச் செய் !

என்னை வெறுமையால் நிரப்பியவனே!

என்னை வெறுமையால் நிரப்பியவனே,
உனக்கு என்ன எழுதுவது? நீ நிரப்பிய வெறுமையில் கொஞ்சத்தைத் தான் திருப்பி அனுப்புகிறேன்!
உன்னைப் பற்றி நினைத்ததும் ஏற்படுகிற இந்த சிலிர்ப்பை, ஒரு பதினாறு வயதுப் பெண்ணின் பரவசத்தை, விளக்கிடப் பாவம் என் வார்த்தைகளுக்கு வக்கில்லை.. இந்த முட்டாள்தனங்களை எல்லாம் போதும் என்கிற அளவுக்கு செய்து, கடந்து, கசந்து போன இந்த கட்டத்தில் நீ வந்திருக்கிறாய்! என் மனம் உனக்கு இப்படி ரியாக்ட் செய்வதை என்னால் உண்மையில் நம்பமுடியவில்லை ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாய்த் தான் இருக்கிறது! புதைத்துவிட்ட இறந்துபோன ஒருவர் திடீரென்று முன்னால் வந்து நின்றால், எவ்வளவு நெருங்கியவர் என்றாலும் ஒரு நிமிடம் அதிர்ந்து தானே போவார்? வறண்டு போன என் மனதிற்குள் துளிர்க்கும் இந்த உணர்வுகள் அத்தகைய அதிர்ச்சியைத் தான் எனக்குத் தருகின்றன!
யூ ஸ்வெப்ட் மீ ஆஃப் மை ஃபீட், ஆனால் என்ன? நான் விழவில்லை, பறக்கத் தொடங்கி இருக்கிறேன்!
உண்மையைச் சொல் , என் மனதிற்குள் சிசிடிவி கேமரா எதுவும் வைத்திருக்கிறாயா?! ஒரு நார்சிசிஸ்ட் தன்னை நேசிப்பதை விட, வியப்பதை விட அந்நியரால் ஆழமாய் நேசித்துவிட முடியும் என்று நம்பவைத்திருக்கிறாய்! நானறியா என் பரிமாணங்களை ஒரு மெய்நிகரி அனுபவம் போல் உடனில்லாமலே என்னை உணரச் செய்கிறாய்! உன் பேச்சு கொடுக்கும் எக்ஸைட்மென்ட் ஒரு எலெக்ட்ரானைப் போல என்னை அதிக ஆற்றல்நிலைகளுக்கு தாவச் செய்கின்றன!
ஈர்ப்பு, காதல் என்ற வரையறைக் கட்டமெல்லாம் எதற்கு கண்ணா? சுதந்திரமாய்ப் பெயரிடப்படாமலே திரியட்டும் இது!

ஆழிமழைக் கண்ணா :)

கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா!
மயங்கிப் பாசுரமும் இயற்றினேன்,
சூடிக்கொடுத்தேன்..
சிலநாளில் நீ விஷமக்கண்ணன் என்றறிந்தேன்..
கோபிகைகள் கொஞ்சினால் கூட என்ன?
பாமா கிருஷ்ணனோ? ஆனால் என்ன!
கோகுலக்கிருஷ்ணனாம்,
அனந்தகிருஷ்ணனாம்,
நந்தகிருஷ்ணனாம்!
ஏதானால் என்ன?
காதல் குறையாத வரமுண்டு எனக்கென்றிருந்தேன்!
ஒரு நன்னாளின் முன்னிரவில்
ராதாகிருஷ்ணன் நீயென அறிந்தேன்,
இதொன்றில் ஆய்ப்பாடிவிட்டு வந்தேன்,
சூடிய மாலையைத் திருப்பிக் கொடுத்துவிடு
ஆழிமழைக் கண்ணா :)