13.9.23

இதழின் பயணம்

 


உன் மூக்கெலும்பில் தலைகீழாய்

ஏறியேறி உச்சம் தொட்டு

உன்மத்ததில் கீழே குதிக்க

அடைந்தது ஒரு தீயருவி


தெவிட்டாத தித்திப்புத்தீ தகிக்க 

கன்னக்குழி திசைமாறாது 

தத்தித்தத்தி பள்ளத்தாக்கு இறங்கியேறி

சேர்ந்ததுன் முக முகடு


உன் கழுத்துப்படி இறங்கிவந்து

புகலிடம் தேடித்தேடி,

காறை எலும்புகள் சறுக்கியேறி

வரைந்தது ஒரு முக்கோணப்பாறை


சோர்ந்துவிடாமல் அந்த

முனை தாண்டி

பெருமூச்சுப்புயல் தாங்க

பற்றி நின்றதுன் விலாக்காடு


இனியிந்தப் பயணத்திசைக்கு

வாழ்த்து சொல்லி 

தனிமை வழிகொடுக்கிறது

இடையினுடை!


மரமான கூடு

கூடு கட்டினோம்

கல்லும் மண்ணும்

சுள்ளியாய் சருகாய் வைத்து

கூடுதான் கட்டினோம்!


ஓர் ஊஞ்சலும்

ஓர் அடுப்பும்

சில தலையணைகளும்

இட்டு வைத்தோம்.


இரு மனங்களும்

நான்கு செவிகளும்

ஒரு கதவும்

திறந்து வைத்தோம்.


ஒரு நம்பிக்கையும்

இரு அன்புள்ளங்களும்

சில கனவுகளும்

விதைத்து வைத்தோம்


கூடாய்த்தான் இருந்தது

வந்த

ஒரு நட்பின் ஆனந்தக் கண்ணீரில்,

ஒரு உறவின் அக்கறைக் கண்ணீரில்,

ஒரு சுற்றத்தின் அழுகைக்கண்ணீரில்,

சிலரின் ஆறுதல் பெருமூச்சுக் காற்றில்,

பலரின் ஆசுவாசப் பெருமூச்சுக் காற்றில்,

சிலரின் அமைதிப் பெருமூச்சுக் காற்றில்,

சில தோல்விகளின் உரத்தில்,

பல ஏமாற்ற ரகசியங்களின் எருவில்,

சொல்லிய சொல்லாத வலிகள் உரத்தில்,

ஒவ்வொரு சுள்ளியும்

ஒவ்வொரு சருகும்

ஒவ்வொரு விதையும்

முளைத்து வேர்விடத்தொடங்கின...


மரமாகி பூத்துக் குலுங்குகிறது கூடு!




23.3.17

நோய்மையின் தனிமை

இழுத்துப்போர்த்திப் படுத்திருக்கிறேன்!

தானாகக் காய்ச்சல் தொட்டுப்பார்ப்பதில் எத்தனை வெறுமை?
வாய்க்கசப்பில் சொந்த சமையல் எத்தனை கசப்பு?
மாத்திரைக் கவர்கள் தானாகப் பிரிக்க எத்தனை கஷ்டம்?

எவரேனும் இருந்திருக்கலாம், எவரேனும்!
"வரட்டுமா? வரச்சொல்லட்டுமா?" ஒலிக்குமென
அலைபேசிகளை அணைத்துவைக்கிறேன்..
"இப்போ பரவால்லையா?" நுழைந்துவிடுமென கதவுகள் அடைக்கிறேன்..
எல்லா மகிழ்ச்சியும், எல்லா கொண்டாட்டங்களும்
அர்த்தமற்றுப் போகின்றன.

நோய்மையின் தனிமை பீடித்திருக்கிறது...
இல்லை, அது
தனிமையின் நோய்மை!

23.9.16

தெளிவான நான்

உன் முன்னாள் காதலியின்
கதையேதோ தூக்கம் மிஞ்சிய 
பின்னிரவில் உதிர்க்கிறாய்..
அவள் அலைபேசியின் கடைசி நான்கு எண்கள்
மறந்துபோனது சுகதுக்கத்தின்
கலவையாகிறது உனக்கு!
தெளிவான பெண்ணொருத்தி
உனக்கு வாய்ப்பாளென்று அவள்
வாழ்த்தியதாய்ச் சொன்னாய்..
இவ்வளவும் பேசியதில் எனக்கேதும்
வருத்தமா என்று வினவுகிறாய்...
வருத்தமென்ன வருத்தம்!
கொஞ்சம் தன்னிலை உணர்தலும்,
முகம் பார்த்திராத அந்த பெண்ணுக்கு
கொஞ்சம் பரிதாபமும் மட்டுமே!
இன்று தெளிவான நான் 
என்றோ  எங்கோ உதிர்த்த வாழ்த்தின் நினைவில்..

2.9.16

அன்பு மொழி

காதலர் தினம், பிறந்தநாள், முதன்முதலில் சந்தித்த நாள் என்று பார்த்துப் பார்த்து கிஃப்ட் வாங்கிக் கொடுத்து, எக்கச்செக்க ரியாக்‌ஷன் எதிர்பார்த்து, ஒவ்வொரு முறையும் பல்பு வாங்குபவரா நீங்கள்?

"நீ கடைசியா எப்போ I love you சொன்னே ஞாபகம் இருக்கா?" என்ற கேள்வியில் சிக்கி சின்னாபின்னமான அனுபவம் உண்டா?

நீங்கள் தனியரில்லை :D நாம் கூட்டத்தோடு தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது.. "அன்பு மொழிகள்" எனும் கருத்தியல்.

ஒவ்வொரு மனிதரும் தன் பிரியத்தை வெவ்வேறு வழியாக வெளிப்படுத்துகிறார். பொதுவாக அவற்றை ஐந்து வகைப்படுத்தியிருக்கிறார் Gary D Chapman. பரிசுப்பொருட்கள் அளித்தல், உடன் நேரம் செலவிடுதல், அன்புறுதியான சொற்களைப் பேசுதல், சேவை செய்தல், ஸ்பரிசம் என இந்த ஐந்தில் ஏதேனும் இரண்டை நாம் ஒவ்வொருவரும் அன்பு வெளிப்பாட்டு மொழிகளாகக் கொள்கிறோம். நம்மவர் எந்த மொழிவாயிலாக அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ அவ்வழியில்தான் பெரும்பாலும் நாம் நம் அன்பை வெளிப்படுத்துகிறோம்.

ஸ்பரிச வெளிப்பாட்டை எதிர்பார்க்கும் உங்களவருக்கு எந்தப்பரிசுப் பொருளையும் விட உங்கள் ஒரு முத்தம் நிறைவளிக்கலாம். எதிர்பார்க்கும் வடிவத்தில் அன்பை வெளிப்படுத்துவதில் தான் இருக்கிறது மேஜிக் :)

இப்படியெல்லாம் காதலை வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டுமா? தொடர்ந்து அன்புமழை பொழிய வேண்டுமா என்ன? வயதாகிறது, வேறு வேலை இருக்கிறது என்றெல்லாம் பேசுகிறவர்களுக்கு..  நீர் ஊற்றாத செடியாக உங்கள் உறவை வாட விடாதீர்கள் :) அவ்வப்போது அன்பு மொழிகளால் உங்கள் உறவுக்கு!