24.2.11

இரவு

பகலின் மாறுவேடம்..
மனிதன் முகமூடி
கழற்றும் கனாக்காலம்..
நிலவின் ஆட்சிக்காலம்..
நேற்றைய பொழுதின்
நினைவுப் பொதி..
நாளைய தினத்தின்
கனவு மதி!!!

முடிச்சு



மூன்று முடிச்சுகளால் மட்டும்
இறுகியதல்ல நம் உறவு!!

என் இரு கைகளிலும் மருதாணி,
முகம் மறைத்து அலையும் கூந்தல்..
பின்னிருந்து அள்ளி நீயிடும்
கூந்தல் முடிச்சு!

எட்டா உயரத்தில் கொடியல் கட்ட
முயன்று தோற்ற ஏமாற்றம் போக்க
எதிர்பாராமல் வந்து நீ போடும்
நைலான் முடிச்சு!

கண்ணயர்கையில் உனக்கு முன் நான்
எழுந்து செல்லாதிருக்க 
விளையாட்டாய் நீ போடும்
நம் ஆடை முடிச்சு!

முடிச்சுகளால் தினந்தினம் இறுகுகிறது நம் உறவு!!!


நன்றி திண்ணை..

அழகு

'அம்மா' எனும் முதல் சொல்லால்
ஈன்றவள் மனம்நிறைக்கையில்..

எட்டி இரண்டடி வைத்து
பெற்றவனுக்குப் பேருவகை அளிக்கையில்..

உடுத்தத் தெரியா சேலை சுற்றி
உறவினரில் சிரிப்பு விதைக்கையில்..

முதல் கவிதைக் கிறுக்கல் கிறுக்கி
தான் மட்டும் படிக்கையில்..

முதல் காதல் மலர்ந்து அவனை
நினைத்துத் தானாய் சிரிக்கையில்..

மணந்தவன் கைப்பிடித்த நாணத்துடன்
பெற்றோர் பிரிவுக் கண்ணீர் சேர்கையில்..

குழவியின் முதல் ஸ்பரிசம் கொண்டு
அதன் அழுகை ரசிக்கையில்..

வெளிப்படுகிறது தானாய்..
பெண்மையின் உண்மை
இயற்கை அழகு!!!

போட்டி

ஊடலில்
உனக்கும் உன் மேல்
நான் கொண்ட கோபத்திற்கும்!
தோல்வி எனும் முடிவு தெரிந்தும்
விடாப்பிடியாய் "ஜூலியஸ் சீசர்"
மரணத்தை எதிர்பார்த்து என் கோபம்!!

சருகு

மரமே!
பயனற்றுப் போனதும்
என்னை கீழே
தள்ளிவிடுகிறாயே!!
தரை என்ன எனக்கு
முதியோர் இல்லமா??

23.2.11

நான் மரம்...

முறையிடுகிறேன் தமிழே!
பெஞ்சுகளை நம்பப் பெட்டிகள்
இல்லை என்னிடம்!!
நின் நடுவுநிலைமையை நம்பி நான்..

உன் புதல்வர்கள்
ஏசுகிறார்கள் மரம போல்
நிற்கிறாயே என்று! சொல்கிறார்கள்
உணர்சியற்றவனை மரம் என்று!

ஏனப்படி??

என் நிழலை என்றாவது
நான் வாடகைக்கு விட்டிருக்கிறேனா?

என் இலையின் பச்சையைத் தவிர
பச்சையாய்ப் பேசியிருப்பேனா?

உயிர் வாழத் தண்ணீர் எங்களுக்கும் தேவை..
ஆனால் பக்கத்து மரங்களோடு சண்டையிட்டு
வேர்கள் உடைத்துக்கொண்டிருக்கிறோமா??

உயிர்வளி உற்பத்திக்கு உள்ளபடியே
கையூட்டு கேட்டிருக்கிறேனா?

அரசமரம் நான், பிள்ளையாருக்குத் தான்
மத கோவிலில் வளரமாட்டேன் என்று
பிடிவாதம் பிடித்திருக்கிறேனா?

என் மலரைச் சூடக்கூடாது என்று
கைம்பெண்களை ஒதுக்கினேனா??

இவை தாம் உணர்ச்சி என்றால்..
"மரத்துப்போனவர்கள்" தான் நாங்கள்!

மனித உணர்ச்சியின் உறைவிடமாய்
ஓலைச்சுவடிகளாய், தாள்களாய், பலகைகளாய்
நாங்கள்!
உணர்ச்சியின் உச்சத்தில் தீப்பந்தமும் நாங்கள்!

உணர்சியற்றுப் போய் இருக்கிறோமா?
சொல் தமிழே!
நாங்கள் திட்டிக்கொள்கிறோம்
'மனிதன் போல் இருக்கிறாயே' என்று!!


16.2.11

கடற்கரைக் கேள்விகள்

வளர்கிறேனா தேய்கிறேனா
கண்டுபிடி! சவால்விடும்
15 நாள் குழவி- நிலாப்பெண்..

அவளுள் புதைந்திருக்கிறேனா
பிரிந்திருக்கிறேனா கேள்வியெழுப்பும்
கரையோரத் தென்னையின் கீற்று..

கீற்று ஆட நான் பிறக்கிறேனா?
நான் தவழக் கீற்று ஆடுகிறதா?
குழப்பத்தில் தென்றல்..

இனிதாய்த் தாலாட்டுவது
நீயா நானா?? தென்றலிடம் 
போட்டியிடும் அலையோசை..

எந்தக் கேள்வியுமின்றி
காலத்தோடு கரையும் என் மௌனம் மட்டும்...


13.2.11

காதலர் தினம்

பிறருக்கு ஒரு தினம்
நமக்கு தினம் தினம்..
காதலர் தினம்