2.9.12

மனப் பொருளின் நிலை

தெரியாமல் வாசித்துவிட்டப் 
பழைய குறுஞ்செய்திப் பெட்டகம்
அழுந்தக் கிளறுகிறது ஆழ்மனதை!

அழிக்க மறந்திட்ட அந்தப்பெட்டகமும்
அழிக்க மறுத்திடும் உன் நினைவுகளும்
கால இயந்திரமாய்க் கண் கலங்கச் செய்கின்றன!

என்னால் உனக்கோ, உன்னால் எனக்கோ
தெரியவந்த எவரையும் நிமிர்ந்து பார்க்க முடிவதில்லை

திரவப் பொருளாய் உன் சூழல்,
நான் நீங்கிய வெற்றிடம் நிரப்ப
சுற்றிலுமிருந்து பாய்பவர் பலர்!

என் மனதைப்போலில்லை,
திடப் பொருளாய் என் சூழல்...
நீ நீங்கிய இடத்தை வெறுமை நிரப்புகிறது!

நேரில் எப்போதும்
சந்திக்க நேர வேண்டாம்..
காற்றில் கலக்கும் என் கண்ணீர்,
மனதின் கொதித்தல் விளைவு!



15.8.12

புகைப்பட நொடி

கண்ணுக்கெட்டுகிற தொலைவிலிருந்து
பார்க்கிறேன்!
புகைப்படத்திற்காய்ச் சிரிக்கிறாய்!
அந்த செயற்கைச் சிரிப்பிடம் 
வெட்கித் தோல்வி அடைகின்றன
சுற்றுவட்டாரத்தின் பல இயற்கைச் சிரிப்புகள்!
உன் முகத்தின் பிரகாசம் நிறைத்துவிடுகிறது
சுற்றுப்புறத்தின் ஒளிக்குறைவை!
உன் கன்னக்குழியின் அழகு மொத்தத்தையும்
குவிக்க முடியாமல் திணறுகிறது
நிழற்படக்கருவியின் குவியாடி!
வண்ணப் புகைப்படத்தில் உன்னைத்தவிர
எல்லாமே கருப்பு வெள்ளையாய்த்தான் இருக்கும்!
விசை அழுத்தப்பட்டு புகைப்படத்தில்
நீ பதியும் அந்த நொடியில்
ஸ்தம்பிதுப்போகிறது என் உலகம்!!!

16.6.12

கூடு

நீண்ட நாளைக்குப் பிறகான
சந்திப்பில் நம்மிருவருக்குப்
புதிதல்லாத புல்வெளியில்
அமர்கிறோம்! புதிதாய்
முளைத்திருக்கிறது இடைவெளி!
பெயர் தெரியாத பறவையொன்று
தலைகளை உரசியபடி பறக்கிறது,
சருகொன்றைச் சுமந்தபடி!

மௌனங்கள் ஊடாட
பரஸ்பர விசாரிப்புகள்!
காற்று கிழிக்கப்படுகிறது,
இந்த முறை ஒரு குச்சி!

தயக்கங்களுக்குப்பின் நடுவில்
வந்துவிட்ட நிகழ்வுகள்,
மனிதர்களென ஆழ்ந்திருக்க,
கவனக்கலைப்பில், அலகைக்குத்தாத முள் ஒன்று!

பெருமூச்சுகளோடு சிலநினைவுகளை
அசைபோட்டு தன்னிச்சையாய் வெளிவந்த
கண்ணீர் மறைக்கத் திரும்புகையில்,
கொத்தாய்க் கொஞ்சம் நார்களோடு மீண்டுமவர்!

மணிகள் கொண்டாலும், மனம் கொள்ளாமல்,
கட்டாயமாய்க் கைபிடித்து எழுந்து
தூசிதட்டுகிறோம், நம் ஆடைகளையும்!
ஒரு கூடு கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது!!!

14.6.12

பார்வை

பலரைப் பார்க்கிறேன்!
சிலரை அன்போடு,
சிலரைப் பரிவோடும்
நட்போடும்..
வேறு சிலரை நம்பிக்கையோடு,
சில நேரங்களில் மரியாதையோடு!
ஒரு பார்வையின்போது மட்டும்
மூளை வேலைநிறுத்தம் செய்கிறது,
இதயம் அதிகமாய் இயங்குகிறது!
கருவிழிகள் பத்திரப் படுத்துகின்றன
உன் பிம்பத்தை!

13.6.12

அழகான தருணம்

பின்னோக்கி திருப்பப்படும் நாட்குறிப்பில்
விரியும் காட்சிகளுக்குள்
எப்படியோ புகுந்து விடுகிறது
இப்படி நடந்திருக்கலாம்!
இதைச் செய்திருக்கலாம்!
இப்படி இருந்திருக்கலாம்!
என்பதான அங்கலாய்ப்புகள்.
நீ தென்படும் காட்சிகள் மட்டும்
விதிவிலக்காய்..

அந்த தருணங்களை விட அழகாக
எந்த ஒரு தருணமும் இருக்க முடியாது!
அதே தருணம் உட்பட.