2.1.12

முதல் ஆண்டு :)


என் க”விதை”களில் முதன் முறையாய் கவிதையல்லாத ஒரு பதிவு! இந்த என் க”விதை”களின் கதை!
கல்லூரி முதல் ஆண்டின் இறுதியில் ஒரு நாள் என் சகோதரர் ஒருவர் எழுதிய கவிதைகளைப் படிக்க வேண்டும் என்று நான் கேட்டபோது முகநூலில் அவர் ஓர் உரலியை அனுப்பினார். அந்த வலைப்பூ தான் என்னைப் பதிவுலத்தை நோக்கி இழுத்தது. அவர் வலைப்பூ அதன் பின் எழுதப்படாமலே இருப்பது வேறு சேதி.
E.D sheetகளின் வெள்ளை வெளிகளும், பாடப்புத்தகங்களின்  கடைசி பக்கங்களும் கிறுக்கல் களங்களாய் இருந்து அதிகபட்சம் ஒரு செமஸ்டருக்குள் அவை இருந்த சுவடு தெரியாமல் போவது பழகிப்போயிருந்த எனக்கு கவிதைகளை சேகரித்து வைக்க ஒரு கிடங்கு கிடைப்பதாய் எண்ணித்தான் ‘என் க”விதை”கள்’ –ஐப் புத்தாண்டில் தொடங்கினேன்.
“வலைப்பூ எழுதத் தொடங்கினால் அதிலே முழு நேரமும் செலவிடத் தோன்றும், வேறு வேலை ஓடாது”..., “ஓரிரு பதிவுகளுக்கு மேல் எழுதத் தோன்றாது”.., “அவரவருக்கு இருக்கிற வேலைகளில் நீ எழுதுவதை யார் படிப்பார்கள்?” என்ற பல ஊக்குவிக்கும் கருத்துக்களுக்குப் பிறகு 2011க்கான  new year resolution ஆக வலைப்பூவில் பதிவிடத் தொடங்கினேன்.
உண்மையில் எழுத ஒரு வெளியாக மட்டும் இல்லாமல் இந்த பதிவுலகம் எனக்கு நிறைய பாடங்களையும் மனிதர்களையும் தந்திருக்கிறது. முகம் பார்த்திராத ஒரு அழகிய நட்பு வட்டத்தைத் தந்திருக்கிறது. கிறுக்கல்களையும் ரசித்து, உற்சாகப்படுத்தி, தேவையான நேரங்களில் ஆலோசனைகள் தந்து, என் எழுத்தையும் ‘கவிதைகள்’ என்று அங்கீகரித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூற இது சமயம் என்றெண்ணுகிறேன்.
இந்த 20 வருடங்களில் உங்களை எல்லாம் இந்த வலைப்பூவில் சந்தித்த இந்த ஒரு வருடம் எனக்கு சிறிதேனும் முதிர்ச்சியைத் தந்திருக்கிறது! என் நினைவுகளில் இடம் பிடித்திருக்கும் அனைத்து பதிவுலக சகோதர சகோதரிகளுக்கும் மனம் கனிந்த நன்றி!!! 

இருட்டறை

ஒளி அமிழ்ந்த ஓர் இரவு,
நிலவு ஒரு நாள் தற்செயல் விடுப்பில்..
வானுலக தினசரியில் அறிவிப்பொன்று கொடுக்கலாம்
விண்மீன்களைக் காணவில்லையென்று!
கண்டுகொள்ளப்படாதிருக்க கறுப்புச்சாயம் பூசிக்கொண்ட
மேகங்களை வெட்ட ஒரு மின்னலாவது வந்திருக்கலாம்!
யாருமிலா எனதறையின் உட்சுவர்களும்
இருளை உமிழ்ந்து கொண்டிருக்க,
ஒரு மெழுகுவர்த்தியைத் தேடி எடுக்கிறேன்..
என் தீப்பெட்டிக்குள் இருப்பதென்னவோ
இரண்டு எரிந்து போன தீக்குச்சிகள் மட்டும்