Showing posts with label திண்ணை. Show all posts
Showing posts with label திண்ணை. Show all posts

2.1.12

இருட்டறை

ஒளி அமிழ்ந்த ஓர் இரவு,
நிலவு ஒரு நாள் தற்செயல் விடுப்பில்..
வானுலக தினசரியில் அறிவிப்பொன்று கொடுக்கலாம்
விண்மீன்களைக் காணவில்லையென்று!
கண்டுகொள்ளப்படாதிருக்க கறுப்புச்சாயம் பூசிக்கொண்ட
மேகங்களை வெட்ட ஒரு மின்னலாவது வந்திருக்கலாம்!
யாருமிலா எனதறையின் உட்சுவர்களும்
இருளை உமிழ்ந்து கொண்டிருக்க,
ஒரு மெழுகுவர்த்தியைத் தேடி எடுக்கிறேன்..
என் தீப்பெட்டிக்குள் இருப்பதென்னவோ
இரண்டு எரிந்து போன தீக்குச்சிகள் மட்டும்

16.10.11

மீண்டும் ஒரு முறை


மீண்டும் ஒரு முறை
வேண்டும் எனக்கேட்கிறது
உயிர், அந்த சிலிர்ப்பை..
உடல், அந்த பறத்தலை..
மனம், அந்த புல்லரிப்பை..
நீ கேட்ட அந்த நொடி
“என்னோடு வருவாயா
வாழ்வு முழவதும்?”
பயத்தோடு தினம் கேட்கும் கேள்வியாகிவிட்டது
இப்போதெல்லாம், வழக்கமாய்ப் போய்விட்ட
வாக்குவாதங்களுக்கிடையே..
“பேச்சை மாற்றித் தப்பிக்கப் பார்க்காதே!”
என்ற பதிலும் வாடிக்கையாகிவிட்டது!
“அழகாய் இருக்கிறாய்!” என்று
நீ ரசித்த தருணங்கள்தான்
என் முகப்புத்தக முகப்பைப் பிடித்தன அன்று..
முகப்புத்தகப் படங்களில் பார்த்து கூட உனக்கு
ரசிக்கத் தோன்றுவதில்லை இப்போதெல்லாம்!
வாய் கொள்ள முடியாத அந்த சிரிப்பு,
மனம் கொள்ள முடியாத அந்த களிப்பு,
சொல் கொள்ள முடியாத அந்த தவிப்பு,
எல்லாம் மீண்டும் வேண்டும்
ஒரு முறையல்ல..
வாழ்வு முழுவதிற்கும்!!!
நன்றி: திண்ணை

6.10.11

சிற்பம்


‘பாவம் காகம், பசிக்குமென்று
ஒரு வடை கொடுத்தாள் பாட்டி..’
என்று தொடங்கிற்று உன் காக்கா கதை!

பார்த்துப் பிடிக்கவில்லை,
பழகிப்பார்த்துப் பிடித்தது,
சின்ட்ரெல்லாவை உன் இளவரசனுக்கு!

‘ரெயின் ரெயின் கம் அவர் வே’ என்றும்
‘நிலா நிலா பறந்து வரேன்’ என்றும்
பாடப்பட்டன உன் நர்சரி ரைம்ஸ்!

இவை மட்டுமல்ல
அழகாய் உன் தனித்துவத்தோடு
செதுக்கப்படுகிறது குழந்தையும் தான்!

nandri : thinnai

26.9.11

கடைசி இரவு


எதிர்பார்த்துக் காத்திருந்து
படிக்கும் ஒரு தொடர்கதையின்
கனத்த கடைசி அத்தியாயமாய்,
நீண்டு கொண்டே இருந்த
என் நாட்குறிப்பிற்கு
“முற்றும்” போட்டு விட்டேன்..
நாளை, அடுத்த வாரம் என்று
கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம்
தேர்தல் அறிக்கைகளாகப் போகின்றன..
ஏளனமும் அலட்சியமும்
வந்த இடங்களிலிருந்து
மாலைகளும் மலர்வளையங்களும் வரலாம்,
சில பல துளிக்கண்ணீரும்!
பார்த்து ஏமாற இருக்கப்போவதில்லை..
எதெதற்கோ பயந்த பயங்களெல்லாம்
வேடிக்கையாய்த் தோன்றுகின்றன..
கனவுகளும் அவற்றை நோக்கிய
பயணங்களும், தடைகளும்
அது குறித்த போராட்டங்களும்
அர்த்தமற்றுப் போன வெளி இது!
நாளைய விடியலில் மீதமிருக்கும்
என் மிச்சங்கள் மட்டும்
இந்த அறையில்!
பயமல்லாத அதுபோன்ற
எதுவோ ஒன்று ஆக்கிரமிக்கிறது,
எண்ணங்கள் எல்லாம் ஆழ்மனத்தின்
அடியில் அமிழ்ந்துபோய்
அமைதியற்ற ஒரு நிசப்தம்
ஆட்கொண்டிருக்கும் என்னை!

நன்றி : திண்ணை

19.9.11

பேசித்தீர்த்தல்

சவ்வூடு பரவலின்
விதிப்படி பரவுகிறது
கோபமும் வெறுப்பும்,
அடர்ந்திருக்கும் இடத்திலிருந்து
குறைந்திருக்கும் இடத்திற்கு,
விழிக்குப் புலப்படா ஒரு
படலத்தில் ஊடுருவி..
விதிமீறி கிழிகிறது
அப்படலம் சில பரிமாற்றங்களில்..
பேசித்தீர்த்துக்கொள்ள எண்ணி
முன்னேறுகிறேன்..
மனம்மாறி தீர்த்துப்பேசிடத்
தோன்றுகிறது!
ஒன்றுமில்லை இன்னும்,
தீர்ப்பதற்கு, தீர்ந்துபோய்விட்டது
எல்லாம்..
இல்லை! தீர்ந்துபோவதற்கு
ஒன்றுமே இருந்திருக்கவில்லையோ
என்று கூடத்தோன்றுகிறது!!



nandri: thinnai

5.9.11

அந்த ஒரு விநாடி

அந்த ஒரு விநாடியைத்தான்
தேடுகிறேன்..
உன் நாட்குறிப்பிலும்
என் நாட்குறிப்பிலும்,
நம் எழுதுகோல்கள் அழுதிருக்கவில்லை
என் விழிகளைப் போல்..

ஏதோ ஒரு கடிகாரம் அந்த
நொடியோடு நின்றிருக்கும்
என்றெண்ணி கண்பதிக்கிறேன்,
எந்த கடிகாரமும்
துடிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை,
என் இதயத்தைப்போல்..

சிவந்த கண்களோடும்
கனத்த இதயத்தோடும் தேடுகிறேன்,
பரஸ்பர நம்பிக்கையும் அன்பாலான
நம் நட்பில் சந்தேக விஷத்துளி
வீழ்ந்த அந்த நொடியை,
நம் வாழ்வுகளிலிருந்து நிரந்தரமாக
அழிக்க எண்ணி… 



நன்றி : திண்ணை

22.8.11

பொன்மாலைப்பொழுதிலான பேருந்துப்பயணம்


ஒரு பொன்மாலைப்பொழுதிலான
பேருந்துப்பயணம்,தோழியுடன்..
வெட்டிக்கதைகளுக்கிடையே அலறிய
அவளது அலைபேசியில் பிரத்யேக அழைப்பொலியும்
முகமொளிர்ந்து வழிந்த அவள் அசட்டுச்சிரிப்பும்
சொல்லாமல் சொல்லின எதிர்முனையில் யாரென்று!
இங்கிதம் தெரிந்தும்
எங்கும் நகர முடியாத தவிப்பு..
மூடிகளில்லா காதுகளைப்படைத்த
இயற்கையை நொந்தபடி
கைகள் துழாவுகின்றன என் ஜீன்ஸின் பாக்கெட்டை..
கிடைத்துவிட்டது செயற்கை மூடி..
என் இயர்போன்ஸ் காப்பற்றிவிட்டது,
‘ம் இப்போ வேணாம்.. அப்புறமா…’
-களிலிருந்து அவளையும்
‘சிவபூஜைக்குள் கரடி’ என்றும் இன்னும்
பலவாறும் திட்டப்படுவதிலிருந்து என்னையும்!!



நன்றி : திண்ணை

1.8.11

மகிழ்ச்சி


வெளியுலக வெறுப்பை வீட்டில்
கொட்டும் சிடுசிடு அப்பா..

கடுகு பொரிவதைப்போல்
தானும் பொரியும் அம்மா..

கவன ஈர்ப்பு போராட்டமாய்
அழுது தீர்க்கும் குழந்தை..

வீட்டில் மகிழ்ச்சி நிலவ
நிறுவப்பட்ட புத்தர் சிலை
மட்டும் வாசலைப் பார்த்து
சிரித்தபடி வீற்றிருக்கிறது...

2.7.11

பிறப்பிடம்



வெள்ளையர் வேட்டி சேலையிலும்
நம்மவர் ஜீன்சிலுமாய்
நீறு மணமும்
மக்களின் வேண்டுதல்களும்
கமழும் நம் ஊர் கோவில்..

ஊர்களின் பெயர்களும்
விற்கப்படும் பொருட்களும்
ஒலித்துக்கொண்டிருக்கும்
முகம் தெரியா மக்கள்
நிறை பேருந்து நிறுத்தம்..

அதிகபட்ச அலங்கோலத்தில்
வீசப்பட்ட புத்தகங்கள்,
துவைத்த துவைக்காத
துணிகளின் அணிவகுப்பு
கொண்ட விடுதி அறை..

என்று எங்கும்
பிறப்பெடுக்கின்றன என் கவிதைகள்..
என் கண்கள் நோக்கும் உன் கண்கள்
பார்க்கும் போது மட்டும்
மௌனமே தவழ்கிறது சுற்றிலும்..
பேச முடிந்த கவிதை அத்தனையும்
உன் கண்களே பேசிவிடுவதால்..

22.5.11

தூசி தட்டுதல்



உலக உருண்டையின்
ஏதோ ஒரு பகுதியில்
நடக்கும் அழகிப்போட்டி..
மட்டைப்பந்து போட்டியில்
நெட்டை வீரர் ஒருவரின்
ரெட்டை சதம்..
அரைகுறை ஆடை நடிகையின்
ரகசியதிருமணமும் தொடரும்
விவாகரத்தும்..
தெற்கில் எங்கோ ஒரு
வாய்க்கால் தகராறில்
நிகழ்ந்த குரூரக் கொலை..
நம்ப வைக்க முயற்சிக்கும்
தேர்தல் அறிக்கைகளும்
அது குறித்த
ஆட்சி மாற்றங்களும்..
எத்தனை முறை
வாய் பிளந்து பார்த்தாலும்
திருந்தாத மக்களும்
பயன்படுத்திக்கொள்ளும்
உண்மை மகான்களும்..

என எதுவும்
கிடைக்காத அன்று
மீண்டும் தூசி தட்டப்படுவார்
அன்னா ஹசாரேவும் அவரது கொள்கைகளும்..  

15.5.11

தட்டுப்பாடு


உடன் வரும்
வழக்கமாய் வர்ணிக்கப்பட்டு
அன்று கவனிக்காமல் விடப்பட்ட
வெண்ணிலா..
கடந்து செல்லும்
தீப்பெட்டி அடுக்கினாற்போன்ற
கட்டிடங்கள்..
தன் குறிக்கோள் மறந்து
தெரு நாய்களுக்கு அடைக்கலம்
தந்திருந்த குப்பை சூழ் குப்பைத்தொட்டிகள்..
குச்சி மட்டைகளும்
நெகிழி பந்துகளாலும்
ஆன மட்டைப்பந்து போட்டிகள்..
சிறுநகர வீதி..

ஏதோ சொல்ல நினைத்து
உன் கை சீண்டும் என் துப்பட்டா..
என் நாசி தீண்டும்
ஏதேதோ செய்யும் என
விளம்பரப்படுத்தப்படும்
உன் வாசனை திரவியம்..

காற்றும் எதுவும் புக முடியும்
இடைவெளியில் நாம்..
சொல் தட்டுப்பாடு,
என் மனதில் நிகழும்
வேதிவினை போன்றவற்றை விவரிக்க மட்டும்.. 

18.4.11

பின்தொடர்கிறேன்..


உன் வலைப்பூவின் பின்தொடர்வோர்
பட்டியலில் புதியதாய் ஒருவர்..
சொடுக்கிப் பார்க்கிறாய்..
அடையாளம் தெரியாமல்
அப்படியே விட்டுச் செல்கிறாய்..
தினந்தினம் படிக்கிறேன்,
உன் அனுபவங்கள் மலர்கின்றன
வலைச்சரத்தின் பூக்களாய்,
என் நினைவுகளும் மலர்கின்றன...
உணவு மேசையில் உணவூட்டிக்
கொண்டே உன் விழிவிரிந்த
முகபாவங்களோடு தினந்தினம்
கேட்ட உன் தினக்கதைகளை
மறக்க முடியாமல் உன் அம்மா...

நன்றி: திண்ணை..

4.4.11

சுயம்



அழுந்தத் தாழிடுகிறேன் கதவை
வெளித்தொடர்பு முழுதாய்த் துண்டித்து..

கழற்றி மாட்டுகிறேன்
துப்பட்டாவோடு என் சுமைகளையும்..

காலணி அவிழ்க்கும் போது
என் கவலைகளையும் சேர்த்து..

முகம் கழுவும்போது என்
முகமூடிகளையும் அடியோடு..

பயம், பகடு, பாசாங்கு
பொறாமை, பெருமை எனுமனைத்தும் நீங்கி

விளக்கை அணைக்கையில்
இருள் படர்கிறது என் சுயம் மீட்கப்பட்டு...




நன்றி 
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311041021&format=html

30.3.11

சாளரம் திறக்கையில்..


சாளரம் திறக்கிறாய், முதன்முதலாய்
ஒளியைச் சந்திக்கின்றன என் விழிகள்...

“நிலா நிலா ஓடி வா”வும்
“சின்ட்ரெல்லா”வும்
ரசிக்கிறேன் விழிவிரித்து...
விரிக்கிறாய் விழி நீயும் என்னோடு..

அம்புலிமாமாவும் கோகுலமும்
எழுதுக்கூட்டுகிறேன்...
படிக்கிறாய் பக்கமொன்றைப்
பலமணிநேரம் பக்கத்தில் படுத்தபடி..

குறுந்தகடுகளின் கூட்டம் சேர்த்து
வரிபிழறாமல் ரஹ்மானைப் பழகுகிறேன்
ராகம் தவறாமல்...
ரசனை கூட்டுகிறாய் நீயும்.

என் மருதாணிக் கிறுக்கல்
பழக கை தேடி உன் கரம் கேட்கிறேன்..
உள்ள பணியனைத்தும்விட்டு
கைநீட்டி சிரிக்கிறாய்...

சிட்னி செல்டனுக்கும் சுஜாதாவுக்கும்
மாறி புதிதாய்ப் பல
கற்றதாய் நினைக்கையிலும் தோழி
நீ ரசிக்கிறாய் என்னையும்..

“அம்மாவுக்கு எதுவுமே தெரியாது” மாறி
“அம்மாவுக்கு எல்லாம் தெரியுமென எனக்குத் தெரியாது”
உணர்கிறேன் இன்று,
கேள்வி எழுப்பி வெட்கச் செய்கிறது மனசாட்சி..
“அம்மாவின் உண்மையான ரசனை என்ன?”

விடையில்லா மௌனத்துடன் ரசிக்கத் தொடங்குகிறேன்
“நிலா நிலா ஓடி வா”
நான் ஒரு புது சாளரம் திறந்து..

16.3.11

கனவுகள் இனிதாகட்டும்!!


இதுவரை திரையிலும் கண்டிராத
ஒரு பனிச்சூழல்..
திட்டுத்திட்டாக ரோஜா இதழின்
நிறத்தில் சில துளி அடையாளங்கள்..
நகர்கிறது குவியம் மேல் நோக்கி..
என் கடைவிழி வழிந்தோடும் குருதிக்கண்ணீர்
கீழுள்ள பனிமேல் பட்டு
தோன்றுகிறது ரோஜாநிறத் திட்டு..

மையிட்டது போல்
குருதி நிறை கண்கள்
திரண்டிருக்கின்றன ஒரு திசையில்..
பாசமாய்ப் பல நாள் சித்திரமென
பார்த்து ரசித்த உன் பாதத்தடங்கள்
கொடூரமாய்த் தெரிகின்றன முதன்முறையாய்,
தடத்தில் குதிகால் என் பக்கம் என்பதாலோ!

கண்ணுக்கெட்டும் தொலைவுமட்டும்
உன்னைத் தேட நினைத்துப்பின்
கானல்நீராய் உன்னைக் கனாவிலும்
காண விருப்பமில்லாமல் கண்திறக்கிறேன்..

கண்மூடாதிருக்கும் என் மடிகணினியின்
திரையில் முகம்காட்டி முகநூலில்
சொல்கிறாய் “கனவுகள் இனிதாகட்டும்!”


நன்றி
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31103204&format=html