1.4.11

நீ..


நீ நடந்த அடித்தடம் அழியவில்லை
என் வீட்டு முற்றத்தில்..
நீ புழங்கிய மணம் மறையவில்லை
என் சுற்றத்தில்..
நீ பேசிய சொற்கள் எதிரொலிக்கின்றன
அலைபேசியின் அழைப்பொலியாய்..
நீ கொஞ்சியதால் நிரம்பி வழிகிறது
என் மின்னஞ்சல் உள்பெட்டி..
நீ சிரித்த சில தருணம் தாங்கியபடி
என் மடிக்கணினியின் முகப்பு..
நீ கிறுக்கிய கிறுக்கல்களைப் பிரதிபலிக்கும்
என் அறையின் உட்சுவர்..
உரிமை மறுக்க முயற்சிக்கிறாய்
எனக்கு மட்டும்,
உன்னைத் தாங்கிட என்றைக்கும்..

7 comments:

நிரூபன் said...

நீ பேசிய சொற்கள் எதிரொலிக்கின்றன
அலைபேசியின் அழைப்பொலியாய்..
நீ கொஞ்சியதால் நிரம்பி வழிகிறது
என் மின்னஞ்சல் உள்பெட்டி..//

வணக்கம் சகோதரம், அருமையான உவமைகளுடன் ஒரு காதல் கவிதை..

இவ் இடத்தில் //
நீ கொஞ்சியதால் நிரம்பி வழிகிறது
என் மின்னஞ்சல் உள்பெட்டி.//
முத்தங்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம் இன் பாக்ஸினுள் குறிப்பிட்ட அளவு மின்னஞ்சலைத் தானே நிரப்ப முடியும்.

நிரூபன் said...

மனதோடு எப்போதும் கூட வரும் அழகிய உள்ளமொன்றின் நினைவலைகளை கவிதை எளிமையான நடையில் பாடிச் செல்கிறது. கவிதையில் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம். வார்த்தைகளை இன்னும் அழகுறக் கோர்த்து வர்ண ஜாலமாய் கவிதையினை மாற்றியிருக்கலாம்.
நீ... நீ பேசிய சொற்கள் எதிரொலிக்கின்றன
அலைபேசியின் அழைப்பொலியாய்..
நீ கொஞ்சியதால் நிரம்பி வழிகிறது//
நீ இக் கால இலத்திரனியல் உலகோடு காதலைத் தரிசிக்கும், கண்டு மகிழும் ஒரு கவிதாயினியின் பாடு பொருளாய் உள்ளது.

சி.பி.செந்தில்குமார் said...

>>நீ சிரித்த சில தருணம் தாங்கியபடி

நீ சிரித்த சில தருணங்கள் தாங்கியபடி என வரனும்னு நினைக்கிறேன்.. கவிதை நல்லாருக்கு மேடம்

Ram said...

ஆஹா.. காதல் கவிதையா.? காதல் வந்தாலே இப்படியெல்லாம் யோசிக்க சொல்லுமா.?

//நீ கிறுக்கிய கிறுக்கல்களைப் பிரதிபலிக்கும்
என் அறையின் உட்சுவர்//

அப்பா அம்மா கஷ்டபட்டு பெயிண்ட் அடிச்சா இந்த வேலை வேறயா.?

//உரிமை மறுக்க முயற்சிக்கிறாய்
எனக்கு மட்டும்,
உன்னைத் தாங்கிட என்றைக்கும்.//

உண்மை காதலை உணர நேரம் கடக்கும்.. மறுக்கப்பட்ட உரிமைகள் திறக்கப்படும்.. காத்திருங்கள்.. //முயற்சிக்கிறாய்// என இருப்பதை பார்த்தால் அவருக்கும் காதல் இருக்கு ஆனால் வெளி கொண்டுவரமாட்டார் என சொல்வது போல இருக்கு.. அப்படி இருந்தா கொஞ்ச நாளு தான்.. அப்பரம் அவரோட புரக்கணிக்கும் முயற்சியெல்லாம் வேஸ்டாயிடும்..

@நிரூபன்: எனக்கு என்னவோ இது நல்லாயிருக்குற மாதிரி தான் தோணுது பாஸ்.. காதல் ஏக்கத்தில் அதிக கவிரசம் சேக்கமுடியாது என்பது என் கருத்து.. ஆதங்கம் வெளிப்படும் போது அழகு சொற்களுக்கு இடமிருக்காது தானே.!

கயல்விழி said...

@நிரூபன்.. உண்மை தான் சகோ.. ஒரு வரையறுக்கப்பட்ட saturation என்று சொல்லப்படுகிற நிலையில் எழுதப்பட்டதாகத் தான் எழுதினேன்..
வார்த்தைகளில் கவித்துவம் இன்னும் இருந்திருக்கலாமோ என்னவோ.. இந்த சூழலுக்கு இந்த அளவுக்கு மீறினால் மிகுதியாய்த் தோன்றும் என்று எண்ணினேன்.. முதலில் மனதுக்குத் தோன்றிய சொற்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பதித்தேன்..

கயல்விழி said...

@செந்தில்..ஆமாம் சகோ.. தருணங்கள் என்றிருந்திருக்கலாம்..

கயல்விழி said...

@ தம்பி கூர்மதியன்..
//அப்பா அம்மா கஷ்டபட்டு பெயிண்ட் அடிச்சா இந்த வேலை வேறயா.?//
:) :)

இது கற்பனைக் கவிதை தான் சகோ.. நான் பார்க்கும் சில நபர்களின் இடத்தில் என்னை வைத்துப்பார்த்து அவர்கள் உணர்வை சொல்ல முயற்சிக்கிறேன்.. மற்றபடி இப்படி ஒரு சூழ்நிலை லாம் எனக்கு வேணாம்... :O

Post a Comment