28.7.11

காதலும் கவிதையும்


என் கவிதைகளில் பலர் காதலிக்கிறார்கள்..
என் கவிதைகளை நீ உட்பட
பலரும் காதலிக்கிறார்கள்...
என் கவிதைகளைப் படித்த பலர்
என் காதலைக் காதலிக்கிறார்கள்..
என் கவிதைகளும் உன்னையும்
காதலையுமாய்க் காதலிக்கின்றன..
என் காதல் மட்டும் என் கவிதைகளைக்
காதலிப்பதே இல்லை..
உன்னைக் காதலிப்பதில்
தன்னை என் கவிதைகள் மிஞ்சிவிடுமோ
என்ற பயத்தில்...

24.7.11

தண்டனை

எப்போதும் உன்னைச் சுற்றியே
அமைப்பதற்காய் கோபித்துக்கொண்டன
என் எழுத்துக்கள்...
அதை மதித்து
வேறு ஏதேதோ எழுத
நான் முயற்சிக்க,
எந்த பாடுபொருளும்
உன்னை நெருங்கக்கூட
முடியாமல் இருக்க,
தன் தவறை உணர்ந்து
குற்ற உணர்வோடு
என் பேனா
முள்ளிலேயே
வாழ்நாள் சிறை என்று
சுய தண்டனை அளித்துக்கொண்டன
என் எழுத்துக்கள்..
வேலையில்லாமல் என்
கணினியின் மொழிமாற்றி..

23.7.11

ஊடல்

எதேச்சையாய் ஏதோ தோன்றி
தன்னிச்சையாய் பேனா நகர,
ஜாவா, லினக்ஸ் ஏடுகள் எல்லாம்
தமிழ்க்கிறுக்கல்களால் நிறைந்த
நேரங்கள் கடந்தே விட்டன!!!
எழுத நினைத்து வெற்றுத்தாள்
எடுக்கிறேன், ஊடல் கொண்டு
தலை குனிய மறுக்கிறது என் பேனா!!!

12.7.11

கருப்பு வெள்ளை


வெள்ளை வெளியில்
பொதிந்து கிடக்கும் என் கருவிழியில்
கருப்பு பிம்பமாய் நீ..
படர்ந்து ஆக்கிரமிக்கிறன்றன மனதை
கருப்பும் வெள்ளையும்..

என் கருப்பு இருட்டுக்குள்
வானவில் முளைக்கச் செய்த
வெள்ளை ஒளி நீ..
அறிவியல் கூறாத ஒளிப்பிரிதல்..

மனதின் அனைத்து நிறங்களும்
வெளிக்காட்டும் வெள்ளை நான்..
அனைத்தையும் உள்வாங்கி எதையும்
பிரதிபலிக்காத கருப்பு நீ..

வெள்ளை காகிதம் நான்..
என் மீதான கருப்புப் புள்ளி நீ..
என்னைப் பார்ப்போரெல்லாம்
உன்னைத் தான் காண்கிறார் என்னில்..
வெள்ளை மனம்கொண்ட என்
காரிருள் ஆசைகளுக்கு
வெள்ளைக்கொடி அசைப்பாயா???

2.7.11

பிறப்பிடம்



வெள்ளையர் வேட்டி சேலையிலும்
நம்மவர் ஜீன்சிலுமாய்
நீறு மணமும்
மக்களின் வேண்டுதல்களும்
கமழும் நம் ஊர் கோவில்..

ஊர்களின் பெயர்களும்
விற்கப்படும் பொருட்களும்
ஒலித்துக்கொண்டிருக்கும்
முகம் தெரியா மக்கள்
நிறை பேருந்து நிறுத்தம்..

அதிகபட்ச அலங்கோலத்தில்
வீசப்பட்ட புத்தகங்கள்,
துவைத்த துவைக்காத
துணிகளின் அணிவகுப்பு
கொண்ட விடுதி அறை..

என்று எங்கும்
பிறப்பெடுக்கின்றன என் கவிதைகள்..
என் கண்கள் நோக்கும் உன் கண்கள்
பார்க்கும் போது மட்டும்
மௌனமே தவழ்கிறது சுற்றிலும்..
பேச முடிந்த கவிதை அத்தனையும்
உன் கண்களே பேசிவிடுவதால்..