26.9.11

கடைசி இரவு


எதிர்பார்த்துக் காத்திருந்து
படிக்கும் ஒரு தொடர்கதையின்
கனத்த கடைசி அத்தியாயமாய்,
நீண்டு கொண்டே இருந்த
என் நாட்குறிப்பிற்கு
“முற்றும்” போட்டு விட்டேன்..
நாளை, அடுத்த வாரம் என்று
கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம்
தேர்தல் அறிக்கைகளாகப் போகின்றன..
ஏளனமும் அலட்சியமும்
வந்த இடங்களிலிருந்து
மாலைகளும் மலர்வளையங்களும் வரலாம்,
சில பல துளிக்கண்ணீரும்!
பார்த்து ஏமாற இருக்கப்போவதில்லை..
எதெதற்கோ பயந்த பயங்களெல்லாம்
வேடிக்கையாய்த் தோன்றுகின்றன..
கனவுகளும் அவற்றை நோக்கிய
பயணங்களும், தடைகளும்
அது குறித்த போராட்டங்களும்
அர்த்தமற்றுப் போன வெளி இது!
நாளைய விடியலில் மீதமிருக்கும்
என் மிச்சங்கள் மட்டும்
இந்த அறையில்!
பயமல்லாத அதுபோன்ற
எதுவோ ஒன்று ஆக்கிரமிக்கிறது,
எண்ணங்கள் எல்லாம் ஆழ்மனத்தின்
அடியில் அமிழ்ந்துபோய்
அமைதியற்ற ஒரு நிசப்தம்
ஆட்கொண்டிருக்கும் என்னை!

நன்றி : திண்ணை

19.9.11

பேசித்தீர்த்தல்

சவ்வூடு பரவலின்
விதிப்படி பரவுகிறது
கோபமும் வெறுப்பும்,
அடர்ந்திருக்கும் இடத்திலிருந்து
குறைந்திருக்கும் இடத்திற்கு,
விழிக்குப் புலப்படா ஒரு
படலத்தில் ஊடுருவி..
விதிமீறி கிழிகிறது
அப்படலம் சில பரிமாற்றங்களில்..
பேசித்தீர்த்துக்கொள்ள எண்ணி
முன்னேறுகிறேன்..
மனம்மாறி தீர்த்துப்பேசிடத்
தோன்றுகிறது!
ஒன்றுமில்லை இன்னும்,
தீர்ப்பதற்கு, தீர்ந்துபோய்விட்டது
எல்லாம்..
இல்லை! தீர்ந்துபோவதற்கு
ஒன்றுமே இருந்திருக்கவில்லையோ
என்று கூடத்தோன்றுகிறது!!



nandri: thinnai

5.9.11

அந்த ஒரு விநாடி

அந்த ஒரு விநாடியைத்தான்
தேடுகிறேன்..
உன் நாட்குறிப்பிலும்
என் நாட்குறிப்பிலும்,
நம் எழுதுகோல்கள் அழுதிருக்கவில்லை
என் விழிகளைப் போல்..

ஏதோ ஒரு கடிகாரம் அந்த
நொடியோடு நின்றிருக்கும்
என்றெண்ணி கண்பதிக்கிறேன்,
எந்த கடிகாரமும்
துடிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை,
என் இதயத்தைப்போல்..

சிவந்த கண்களோடும்
கனத்த இதயத்தோடும் தேடுகிறேன்,
பரஸ்பர நம்பிக்கையும் அன்பாலான
நம் நட்பில் சந்தேக விஷத்துளி
வீழ்ந்த அந்த நொடியை,
நம் வாழ்வுகளிலிருந்து நிரந்தரமாக
அழிக்க எண்ணி… 



நன்றி : திண்ணை