22.8.11

பொன்மாலைப்பொழுதிலான பேருந்துப்பயணம்


ஒரு பொன்மாலைப்பொழுதிலான
பேருந்துப்பயணம்,தோழியுடன்..
வெட்டிக்கதைகளுக்கிடையே அலறிய
அவளது அலைபேசியில் பிரத்யேக அழைப்பொலியும்
முகமொளிர்ந்து வழிந்த அவள் அசட்டுச்சிரிப்பும்
சொல்லாமல் சொல்லின எதிர்முனையில் யாரென்று!
இங்கிதம் தெரிந்தும்
எங்கும் நகர முடியாத தவிப்பு..
மூடிகளில்லா காதுகளைப்படைத்த
இயற்கையை நொந்தபடி
கைகள் துழாவுகின்றன என் ஜீன்ஸின் பாக்கெட்டை..
கிடைத்துவிட்டது செயற்கை மூடி..
என் இயர்போன்ஸ் காப்பற்றிவிட்டது,
‘ம் இப்போ வேணாம்.. அப்புறமா…’
-களிலிருந்து அவளையும்
‘சிவபூஜைக்குள் கரடி’ என்றும் இன்னும்
பலவாறும் திட்டப்படுவதிலிருந்து என்னையும்!!



நன்றி : திண்ணை

1.8.11

மகிழ்ச்சி


வெளியுலக வெறுப்பை வீட்டில்
கொட்டும் சிடுசிடு அப்பா..

கடுகு பொரிவதைப்போல்
தானும் பொரியும் அம்மா..

கவன ஈர்ப்பு போராட்டமாய்
அழுது தீர்க்கும் குழந்தை..

வீட்டில் மகிழ்ச்சி நிலவ
நிறுவப்பட்ட புத்தர் சிலை
மட்டும் வாசலைப் பார்த்து
சிரித்தபடி வீற்றிருக்கிறது...

28.7.11

காதலும் கவிதையும்


என் கவிதைகளில் பலர் காதலிக்கிறார்கள்..
என் கவிதைகளை நீ உட்பட
பலரும் காதலிக்கிறார்கள்...
என் கவிதைகளைப் படித்த பலர்
என் காதலைக் காதலிக்கிறார்கள்..
என் கவிதைகளும் உன்னையும்
காதலையுமாய்க் காதலிக்கின்றன..
என் காதல் மட்டும் என் கவிதைகளைக்
காதலிப்பதே இல்லை..
உன்னைக் காதலிப்பதில்
தன்னை என் கவிதைகள் மிஞ்சிவிடுமோ
என்ற பயத்தில்...

24.7.11

தண்டனை

எப்போதும் உன்னைச் சுற்றியே
அமைப்பதற்காய் கோபித்துக்கொண்டன
என் எழுத்துக்கள்...
அதை மதித்து
வேறு ஏதேதோ எழுத
நான் முயற்சிக்க,
எந்த பாடுபொருளும்
உன்னை நெருங்கக்கூட
முடியாமல் இருக்க,
தன் தவறை உணர்ந்து
குற்ற உணர்வோடு
என் பேனா
முள்ளிலேயே
வாழ்நாள் சிறை என்று
சுய தண்டனை அளித்துக்கொண்டன
என் எழுத்துக்கள்..
வேலையில்லாமல் என்
கணினியின் மொழிமாற்றி..

23.7.11

ஊடல்

எதேச்சையாய் ஏதோ தோன்றி
தன்னிச்சையாய் பேனா நகர,
ஜாவா, லினக்ஸ் ஏடுகள் எல்லாம்
தமிழ்க்கிறுக்கல்களால் நிறைந்த
நேரங்கள் கடந்தே விட்டன!!!
எழுத நினைத்து வெற்றுத்தாள்
எடுக்கிறேன், ஊடல் கொண்டு
தலை குனிய மறுக்கிறது என் பேனா!!!