27.3.14

புத்தாண்டின் முதல் வாரம்

விருப்பத் தேர்வுப் பட்டியலில்லாமல் 

தேதியிட வேண்டிய எல்லா இடங்களிலும்

அடித்துத் திருத்தப்படுகிறது

மறதியில் எழுதப்பட்ட முந்தைய வருடம்..

ஒவ்வொரு முறையும்

நாள்-கிழமை மாற்றிக்காட்டி

ஏமாற்றிவிடுகிறது இன்னும்

கழற்றப்படாத பழைய நாட்காட்டி.

ஏற்கனவே மூச்சுத்திணறத் தொடங்கிவிட்ட

புத்தாண்டு தீர்மானங்களைக்

கருணைக் கொலை செய்துவிட

மனசாட்சியுடன் போராட்டம்..

வழக்கம் போல இந்த ஆண்டும்

வந்திருக்கிற புத்தாண்டை

வழக்கம் போலவே நேரம் எடுத்துதான்

பழகிக்கொள்கிறது மனம்..

தினம் நடக்கும் இவ்வழியில்..

கண்ணை உறுத்தும் எழுத்துப்பிழையோடான
அறிவிப்புப்பலகை இருந்திருக்கக்கூடும்
இன்றைப்போல் அன்றும்!

வழியெங்கும் பார்வையால் துகிலுரியும் பாவி துச்சாதனர்கள் இருந்திருப்பார்கள்
இன்றைப்போல் அன்றும்!

வெள்ளை உடையணிந்த நேரம்பார்த்து சேற்றை மேலிறைத்தன மகிழுந்துகள்
இன்றைப்போல் அன்றும்!

ஆனாலும் வெறுப்பேற வழிநெடுகிலும் சாக்குகள் சிக்கியதில்லை,
இன்றைப்போல் அன்று!

வழித்துணை உந்தன் இடம் வெறுமை இன்று..

11.10.13

உன்னைக்காண வருகையில்
மறந்து கிளம்பி விடுகிற அலைபேசி
அழைத்துக் கெஞ்சுகிறது
தன்னையும் கூட்டிச்செல்லச் சொல்லி..

22.6.13

தேவதையும் சூப்பர் ஹீரோவும்

"அம்மா என்ன கேட்டாலும் தருவாங்க"
என்றபோது தேவதைக்கதைகளின்
தேவதைகள் அம்மாவின் முகம் சூடிக்கொண்டன!

"எங்க அப்பா கிட்டே சொல்லிடுவேன்"
என்ற நட்புமிரட்டல்களின்போது
சூப்பர் ஹீரோக்கள் அப்பாவிடம் தோற்றுத்தான் போனார்கள்!

வாழ்வின் சில பக்கங்கள் திரும்பிய பின்னர்
பயண நேர மூட்டைகளை நான் தூக்கத் தொடங்கியபோதும்,
சிறுதூர நடைக்குப் பின்னர் அவர்கள் மூச்சிரைத்து அமரும்போதும்
மூளைக்கு எட்டுகிறது!
தேவதைகளுக்கும் சூப்பர் ஹீரோக்களுக்கும்
வயசாகும் தான் போலிருக்கிறது!

14.6.13

மீண்டுமொரு பேருந்துப்பயணம்

நீ அடித்துப் பிடித்த அந்த
இருவருக்கான பேருந்து இருக்கையில்
தொந்தரவுகள் குறைந்த
ஜன்னலோரத்தை எனக்களித்து
மீதமுள்ள இடத்தில் அமர்கிறாய்
ஒரு பெருமூச்சுடன்!
ஜன்னல் கதவை
மூடிக் கொள்கிறோம்,
நமதாகிறது அவ்வுலகம்!
துப்பட்டாவைப் போர்த்திக்கொண்டு,
தலைமுடியைத் தூக்கி முடிகிறேன்
ஓய்வுக்கான ஏற்பாடு !
அயர்வும், நீ இருப்பதாலான பாதுகாப்பும்
சாய்க்கிறது என்னை, வசதியான உயரத்திலுள்ள
உன் தோள் மேல்!
விழிமூடுதலும் நித்திரையும்
சேர்ந்துகொண்டு விடுகின்றன விரைவில்,
நீ எப்போது உறங்கினாய் என்று
அறியும் விழிப்பில் இல்லை நான்!
நம் சாலையின் நெஞ்சுக்குழியில்
இறங்கிப்பார்க்கும் பேருந்தின் முயற்சியில்
ஆடிப்போய் எரிச்சலோடு விழிக்கிறேன்,
திறவாத கண்களுடன்
முட்டிக்கொள்கிறாய் முன்னிருக்கையின் பின்புறத்தில்,
அதற்கு முன்பே தன்னிச்சையாய்க்
கை வைத்திருக்கிறாய், என் தலை
முட்டிக்கொள்கிற வாய்ப்பிருக்கிற இடத்தில்!
அப்பா! இடித்துக்கொண்டது நீ தான்!
உறைக்கிறது எனக்கு!!!