10.6.13

உயரப் பறப்போம்!

பறவைகள் அரசவைக் கூட்டமொன்று
நடந்த இடம் நகரோரக் குன்று,
வருகைப் பதிவில் குறைந்தது ஒன்று
கண்டுபிடித்தார் காகம்தானென்று!

அமாவாசை இன்றென்றது பருந்து,
காகத்திற்கு கிட்டிடும் அறுசுவை விருந்து
பசி, பட்டினி என்று படுகின்றோம் கஷ்டம்,
காகத்திற்கு மட்டும் அடித்தது அதிர்ஷ்டம்!

உணவளிக்காவிட்டாலும் எம்மை
உணவாக்காது இருந்தால் நலம் ,
"சிக்கன் பெயரால் சின்னாபின்னம்"
வடித்தது கோழிக்கண்ணீர்!!

காக்கையோடு எம்மையும்தான்
தம் சாதி என்றான் கவிஞர்கோ,
அலைபேசி கோபுர அட்டூழியத்தால்
அழிந்தது குருவி எம் இனம் தானே!

தேசியப் பறவை என்றிட்டார்,
தேடித் தேடிக் கொன்றிட்டார்!
அழகால் விளைவது ஆபத்து
அறியும் உலகம் எம்மால்தான்!

எதிர்காலம் சொல்லச்சொல்லி,
நிகழ்காலம் இழக்கச் செய்கின்றார்
காகத்திற்கேன் இல்லையொரு கூண்டு?
அது மட்டும் களிக்கிறது உறவோடு உண்டு!

புலம்பித் தீர்த்த வேளையில் வந்தது
காகம் வெட்கச் செய்ய
கிடைத்த உணவெல்லாம் உள்ளது பொந்தில்,
அனைவரும் வாரீர் விருந்து செய்ய!



3 comments:

Unknown said...

Extraordinary ..............Lady Bharadhidasan :) awesome sister....

திண்டுக்கல் தனபாலன் said...

காகத்திற்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்...?

Yaathoramani.blogspot.com said...

சொல்லிச் சென்றவிதமும்
முடித்த விதமும் அருமை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment